நெல்லையில் தொடர் மழைக்கு இடிந்த வீடு - 8 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

இடிந்த வீடு

நெல்லையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் டவுன் பகுதியில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிர் தப்பினர். 

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்த நிலையில் இன்று வெயில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாள்களாகப் பெய்த அடைமழையின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிக் கிடக்கின்றன. சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சாலைகள் மற்றும் வீடுகளில் புகுந்த வெள்ள நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. 

நெல்லை பேட்டை, மேலப்பாளையம், மகிழ்வண்ணபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. தெருக்களிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சந்திப்பு பேருந்து நிலையப் பகுதியிலும் தண்ணீர் தேங்கிக் இடப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ-வான டி.பி.எம்.மைதீன்கான், ‘தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். 

உயிர் தப்பியவர்கள்

இந்த நிலையில் நெல்லை டவுன் வயல் தெருவில் இசக்கி என்ற கூலித் தொழிலாளியின் வீடு உள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் உள்ளே 8 பேர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். இதனிடையே, மங்களமேடு பகுதியில் உள்ள குளம் நிறைந்து உடைந்தது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. அதைச் சரி செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!