1913 அவசர உதவி எண்ணை சோதித்துப் பார்த்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி! | Chief Justice Indira Banarjee asks lawyers to check State governments flood releif emergency number 1913

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (03/11/2017)

கடைசி தொடர்பு:10:22 (04/11/2017)

1913 அவசர உதவி எண்ணை சோதித்துப் பார்த்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

மழைப் பாதிப்பு தொடர்பாக அரசு அறிவித்துள்ள 1913 எண் வேலை செய்கிறதா என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சோதனை செய்துபார்த்தார்.  


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய கனமழை பல இடங்களில் அதிகாலைவரை நீடித்தது. சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் 30 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தநிலையில், மழைப் பாதிப்புகளைச் சரிசெய்ய பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி தமிழக அரசு சார்பில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், ‘மழைப் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கும் தலா, ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரை அகற்றும் பணியில் 7.5 குதிரைத் திறன் 458 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1913 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையை வாசித்த நீதிபதிகள் அரசு அறிவித்த அவசர உதவி வேலை செய்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறி, வழக்கறிஞர்களை 1913 எண்ணுக்கு அழைத்துப் பார்க்கச் சொன்னார். அப்போது அரசின் அவசர உதவி எண் வேலை செய்வது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், சென்னையில் மழை நீர் தேக்கத்துக்குக் காரணமான திட்டங்களை அனுமதித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘நீர் தேக்கத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடியாகக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நவம்பர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனர்.