‘இப்பவும் பயமா இருக்கு. எத்தன நாள் மழை பெய்யப்போகுதோ!’ - வீடற்றவர்களின் ஒரு மழைநாள் #VikatanExclusive | Condition of homeless people in rainy days

வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (03/11/2017)

கடைசி தொடர்பு:12:45 (04/11/2017)

‘இப்பவும் பயமா இருக்கு. எத்தன நாள் மழை பெய்யப்போகுதோ!’ - வீடற்றவர்களின் ஒரு மழைநாள் #VikatanExclusive

மழை ஜன்னலுக்கு வெளியதான்

எப்பவும் பெய்யுது உனக்கு

எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே!

- இப்படி முடிகிறது எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'வேறு மழை' என்னும் கவிதை.

மழை

மழை - காரம் - காபி... காதல்... மழை அழகா-வெயில் அழகா பட்டிமன்றங்கள்... செல்ஃபிக்கள்... மழைக் கவிதைகள் ஆகியவற்றைப் பகிர ஆயிரம் புது ஐடியாக்களைத் தேக்கி வைத்துக்கொண்டு காத்திருக்கும் வலைதளவாசிகள், மழையை எவ்வளவு அழகாக ரொமான்டிசைஸ் செய்தாலும், மழையைப் பார்ப்பது போன்றதல்ல மழையில் நனைந்துகிடப்பது. அப்படி நனைந்து கிடக்க நிர்பந்திக்கப்பட்டவர்களின் ‘வேறு மழை’தான் இந்தப் பதிவு. அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்து, காபியுடன் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது, அனைவரும் சமமெனப் பொழியும் மழை அற்புதமானதுதான். குறிப்பாக, தண்ணீர், தண்ணீரென்று அலைந்த தமிழகத்துக்கு மழை வரப்பிரசாதம்தான். ஆனாலும், ரசிக்க முடியாமல் கண்முன் நின்று மிரட்டுகிறது 2015 சென்னைப் பெருவெள்ளம்!

மழை

‘பரவலாகக் கனமழை பெய்யக்கூடும்’ என்ற அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே ’இது அதுல்ல, போச்சு. வெள்ளம் வந்துருமோ, மெழுகுவத்தி, பால் பாக்கெட்லாம் வாங்கி ரிசர்வ் வெச்சிக்கணும்; ஓலா, உபெரெல்லாம் புக் ஆகாதே; தமிழ்நாடு வெதர்மேன் ஸ்டேட்டஸ் கரெக்ட்டா ஃபாலோ பண்ணா போதும்; போன தடவ மாதிரிலாம் வெள்ளம் வராதுல்ல; தனியார் செல்போன்லாம் வேலைக்காவாதே; ஒரு பி.எஸ்.என்.எல் நம்பராவது வாங்கிருக்கலாம்; போன வெள்ளத்தில லேப்டாப் போச்சு, கவனமா இருக்கணும்’ போன்ற புலம்பல்கள் மழையின் இரைச்சலைத் தாண்டியும் பரவலாகக் கேட்க முடிகிறது. சென்னை நகரத்தில் வீடு வாங்கிவிட்டாலே பிஸ்தா கிடையாது. வாங்கியிருக்கும் வீடு ஏரிக்குள்ளோ, ஏரிக்கரையிலோ இருந்து, கொஞ்சம் கூடுதல் மழையும் வந்துவிட்டால் ’வீடு இருக்கு, ஆனா இல்ல’ என்கிற எஸ்.ஜே.சூர்யா நிலைக்கு வந்துவிடவேண்டும். சரி, வீடென ஒன்று இல்லாதவர்களுக்கு...?

கங்காநாற்பது வயதான கங்கா அக்காவுக்குச் சென்னைதான் பூர்வீகம். அவரது பாட்டிக்கும் சென்னைதான் பூர்வீகம். மூன்று தலைமுறைகளாக சென்னை பீச் ஸ்டேஷனுக்குப் பின்னிருக்கும் சாலையில்தான் வசிக்கிறார். ஆமாம், நான்கு பலகைக்குள் நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறார். உழைப்பையெல்லாம் கிட்டத்தட்ட வாடகை வீட்டுக்கே செலவழித்து விடும் நடுத்தர, கீழ் நடுத்தர வாழ்க்கைக்குள் எல்லாம் இந்த மக்கள் வரவில்லை. தினசரி உழைப்பினால் வரும் தினசரி வருமானத்தில்தான் கங்கா அக்காவைப் போன்ற பலரது வாழ்க்கையும் நகர்கிறது. சகதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் திட்டிக்கொண்டிருந்தவரிடம், '‘என்னக்கா ஸ்கூலுக்குல்லாம் லீவு விட்டு மழைய நிறுத்திட்டாங்க போலருக்கு’' என்று கேட்டதும் நொந்துகொண்டே, ‘'அடப் போ கண்ணு, முந்தாநேத்து மதியத்திலருந்து ஒல வைக்கல. இப்பதான் சோறு வச்சிருக்கேன். பசிக்குது. எனக்கே இப்படியிருக்கு. புள்ளைங்கள்லாம் இன்னும் சாப்டல பாவம்'’ என்று சொல்லிக்கொண்டே, உட்கார ஒரு சாக்குப்பையைக் கொடுத்தார்.

இரண்டு நாள் மழைக்கே ப்ளாஸ்டிக் கூரை கிழிந்து, அதை ஒட்டவைக்க முயற்சி செய்துகொண்டிருந்த கங்கா அக்காவை ‘'மழைன்னாலே ரொம்ப கஷ்டம்லக்கா’' என்றதும், இரண்டு நாள் மழையைப் பற்றியும், மழையில்லை என்றாலும் பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துவிடாத வீடற்ற வாழ்க்கையைப் பற்றியும்  பேசினார். 

‘‘இங்க எல்லாருமே மீன் பாடி ஓட்றது, லோடு ஏத்துறது, இறக்குறது, துப்புரவு மாதிரியான வேலையத்தான் பாக்குறாங்க. பொம்பளைங்களாம் வேலைக்கு வெளில போவ முடியாது. இங்கயே எங்காளுங்களுக்கே சாப்பாட்டுக் கடை போட்டு, டீ போட்டுக் கொடுத்து காசு வாங்கிக்கலாம். என்னோட பாட்டி இங்கதான் ’’ என்றவர்.... நாலு பலகையை வைத்துக்கட்டப்பட்டு, மேலே பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட வீட்டைக் காட்டி, ‘‘இது புள்ளைங்களோட புக்குங்க, தட்டு முட்டு ஜாமான், டிவி இதெல்லாம் மட்டும் வைக்கிறதுக்குதான். மீன்பாடி வண்டில ரெண்டு பேரு, வண்டிக்கும் கீழ ரெண்டு பேருன்னு அப்படியே ரோட்லயே படுத்துப்போம். நாந்தான் இங்க கொஞ்சம் எல்லார்கிட்டயும் துணிஞ்சு பேசுவேன். போனவாட்டி வெள்ளத்துல எல்லாம் போய்டுச்சு. புள்ளைங்க, துணிமணி, நாய்க்குட்டிய மட்டும் தூக்கிட்டு போஸ்ட் ஆபீஸு, ஸ்கூலுன்னு போய் தங்கிட்டோம். அக்கவுன்ட் இருந்தவங்களுக்கு அஞ்சாயிரம் வந்துச்சு. இல்லாதவங்களுக்கு அதுவும் இல்ல. நல்லவேளையா அப்போ நெறைய பேரு சாப்பாடு, துணிமணில்லாம் கொடுத்தாங்க. இல்லன்னா என்னாயிருக்குமோ” என்று கண் கலங்கி அதைக் காண்பித்துக் கொள்ளாமல், ''ம்..... நெக்ஸ்ட்''  என்பது போலப் பார்த்தார்.

'‘ரேஷன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் வாங்கி வெச்சிருக்கீங்களா?'’ என்று கேட்டேன். ‘‘ரேஷன் கார்டு கொடுக்குறதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நின்னு போச்சு. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி யாருக்குல்லாம் ரேஷன் கார்டு இருந்துச்சோ, அவங்களுக்குஹெமா மட்டும்தான் இப்பவும் இருக்கு. புதுசா கல்யாணம் ஆன குடும்பத்துக்குல்லாம் குடுக்கறதில்ல. என்கிட்ட ரேஷங் கார்டு இருக்கு. மத்த ஜனத்துக்கு வாங்கறதுக்கு, இங்கருக்க கொஞ்சம் பேர கூட்டிட்டு போனப்ப, சிலிண்டர் பில் இருந்தா புக் பண்ணிக்கலாம்னு கேட்டானுங்க. மண்ணெண்ண ஸ்டவ்வயே மீன் வறுக்குறதுக்குத்தான் யூஸ் பண்ணுவோம். அதுவே வசதிதான். மத்தபடி சோறு, கொழம்பெல்லாம் அடுப்புலதான். எங்க போய் சிலிண்டர் பில்ல குடுக்கறது? சரி நமக்குக் கிடைக்காது போலருக்கு, ரேஷன் கார்டுல்லாம் வேணாம்னு விட்டுட்டாங்க” என்று வான் நோக்கிப் பார்த்து “வெள்ளம் வந்தப்ப வாழ்க்கையே ச்சீனு போய்டுச்சு. இப்பவுங்கூட பயமாயிருக்கு. எத்தன நாள் மழை பெய்யப்போகுதோ’’ எனப் பயந்தார். "இன்னும் நாலு நாள்ல இந்தத் தெருவுல ஒரு கல்யாணம். இந்தத் தெருவுல ஒரு பொண்ணுக்கும், அதோ தெரியுது பாரு எதுத்தாப்ல ரோஸ் கலர் ஷீட் போட்ட வீட்டுப் பையனுக்கும் கல்யாணம். நாங்க எல்லாருமாவே சேர்ந்து கல்யாணம் நடத்தி வச்சிடுவோம். பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர் பயந்தபடியே மழை தூற ஆரம்பித்தது. அடுப்பு அணையாமல் தடுக்க எழுந்து ஓடினார்.

பிறந்து பன்னிரண்டு நாள்களான தன் குழந்தையை ஈ மொய்க்காமல் விசிறியபடி கொஞ்சிக்கொண்டிருந்தார் ஹேமா. ‘'ஊரெல்லாம் டெங்குக் காய்ச்சலாயிருக்குல்ல. கார்ப்பரேஷன்லேர்ந்து வந்து பக்கெட்டுல தண்ணியெல்லாம் தெறந்து வைக்கக் கூடாது. குப்பையா கெடக்கக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. மருந்துகூட அடிச்சாங்க'’ என்றவரிடம் ''குளிக்கறது, பாத்ரூம் போறதுல்லாம் என்ன பண்ணுவீங்க?'' என்றேன். ''வீட்டுக்குள்ள ஓரமா நின்னு குளிச்சிட்டு, தண்ணிய சாக்கடைக்குப் பெருக்கி விட்ருவோம், மத்ததுக்குலாம் ரெயில்வே ஸ்டேஷன் கக்கூஸுக்குப் போயிக்கணும். கட்சிக்காரங்கலாம் ஓட்டு கேக்க வரப்போ, எல்லாருமா சேர்ந்து கோரிக்கை வெச்சோம். இந்த மொத்த பேருக்கும் சேத்து ஒரு டாய்லெட் கட்டிக்குடுக்கலாம்ல" எனக் கேட்கிறார் ஹேமா, தூய்மை இந்தியாவின் குடிமகளாக.

மழை

‘‘ஏன் இதோட முடங்கிக் கிடக்கணும்? வேற வேலைக்கு முயற்சி பண்ணலாம்ல'’ என்று கேட்டபோது, ''எந்த வேலைக்குப் போனாலும் அட்ரஸ் கேப்பாங்கள்ல? இதோ பின்னாடி இருக்குற வீட்டோட அட்ரஸ்தான் எனக்கும் அட்ரஸு. அடையாளத்துக்கு கரென்ட் கம்பம், மேரி மாதா கோவிலு இதையெல்லாம் கூடவே எழுதுவோம். இங்க இருக்குறோம்னு தெரிஞ்சிட்டாலே நிரந்தர அட்ரஸ் இல்லாம வேலையெப்படி தர்றதுன்னு சந்தேகப்படுவாங்க. கல்யாணம் ஆனப்போ, நாங்க தனியா பேசிக்கக்கூட கூச்சமாருக்கும். கம்மியான வாடக வீடு பாக்கலாம்னு நெனச்சோம். எங்கள யாரு, என்ன ஆளுங்கன்னு கண்டுபிடிச்சிடறாங்க. யாருமே வீடு குடுக்கல'’ என்றார்.

மழை 

ஹேமா பேசிக் கொண்டிருக்கும்போதே நனைந்த பாவாடையைப் பிழிந்தபடியே படித்துக்கொண்டிருந்த கல்பனாவைப் பார்த்தேன். மழை ரம்மியமானது. மழைக்குக் குடை பிடிப்பவர்கள் ரசனையற்றவர்கள், மழைப் பற்றாக்குறை கொண்ட இந்த நாட்டில், Rain Rain Go Away பாடல் எவ்வளவு அபத்தமானது! மழையை வரவேற்று Rain Rain Come Again என்றுதானே பாடவேண்டும் என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்போம். கல்பனாவிடம் அந்த ரைம்ஸைப் பாடச் சொல்லிக் கேட்டால் எத்தனை கொடூரமானதாக இருக்கும். ஒரு ரைம்ஸ் கூட அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும்படியான சமூகச் சூழல் இல்லை என்ற உண்மையை உணர்த்துகிற வகையில் மழை  அற்புதமானதுதான்.

மழை பொழியட்டும்; சூடான ஃபில்டர் காஃபியின் அளவுக்காவது உண்மை நம்மைச் சுடட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்