வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (04/11/2017)

கடைசி தொடர்பு:17:09 (04/11/2017)

இயற்கையின் கரம் பிடித்து... ஏரிக்கு நடுவே நடந்த திருமணம்..!

திருமணம்

பணம் இருந்தால்தான் கல்யாணம் என்ற நிலை உருவாகிவிட்டது. கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிறார்களோ இல்லையோ முதலில் மண்டபத்தைப் பார்க்க வேண்டும். ஃப்ளெக்ஸ் பேனர், வாழை மர வரவேற்பு, மங்கல வாத்தியம், அய்யர் அர்ச்சனை இல்லாமல் கல்யாணம் இல்லை என்றிருக்கும்  இந்தக் காலத்தில் மண்டபம் இல்லாமல், வாழைமரம் வெட்டாமல், மேள வாத்தியம் கொட்டாமல், ஃப்ளெக்ஸ் அடிக்காமல், அய்யர் வராமல்  சேலம் மூக்கனேரி நடுவே உள்ள திட்டில் அமர்ந்து இயற்கையைப் பிரார்த்தனை செய்து திருமணம் செய்திருக்கிறார்கள் அரவிந்த் - பூவிழி  தம்பதி.  

இதற்காகக் காலையில் மணமக்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மூக்கனேரியில் காத்திருந்த பரிசலில் ஏறி பயணித்தார்கள்.  மிக எளிமையாக அலங்கரிக்கப்பட்ட மண் திட்டில் கதர் வேட்டி, கதர் சீலையோடு மணமக்கள் அமர்ந்து திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு தண்ணீரால் சூழப்பட்டிருந்த அந்தத் திட்டில் மணமக்கள் இணைந்து 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு திரும்பி வந்து ஏரிக்கரையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினார்கள்.

திருமணம் எளிமையாக இருந்தாலும்  விதவிதமான  உணவுகள் தாராளமாக பரிமாறப்பட்டன. இத்திருமணத்துக்கு திரைப்பட இயக்குநர்கள் பாலாஜிசக்திவேல், ராஜூமுருகன் மற்றும் இரு வீட்டார் உறவினர்கள், சேலம் மக்கள் குழு உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரும்  வந்திருந்து வாழ்த்துகள் தெரிவித்ததோடு இந்த விசித்திர திருமணத்தைப் பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

திருமணம்

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ், ''கல்யாணம் என்பதே சிறப்பு. அதைச் சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்தத் தம்பதி அப்படி நடத்தியிருக்கிறார்கள். நான் பொதுவாகவே அமைப்பில் இருக்கும் தோழர்களுக்குத் திருமணம் உறுதியானதும் அவர்களைச் சந்தித்து இயற்கையோடு இணைந்து திருமணத்தை நடத்துங்கள் என்று கூறுவேன். அப்படித்தான் அரவிந்திடமும் கூறினேன். அரவிந்தும், அவரது அப்பாவும் உடனே சம்மதித்தார்கள்.

ஆனால், அவரது அம்மா சற்று யோசித்தார். பிறகு அரவிந்த்  அம்மாவும் சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து, அரவிந்த் பூவிழியிடம் பேசினார். பூவிழி எந்த மறுப்பும் கூறாமல் நானும் இயற்கையை நேசிக்கக்கூடியவர் என்று சம்மதித்தார். பிறகு பூவிழி வீட்டாரிடம் சம்மதம் பெற்று இத்திருமணம் இங்கு நடைபெற்றுள்ளது. அதனால் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

திருமணம் என்பது இன்று வன்முறையாக மாறிவிட்டது. பணங்களைக் கொட்டி, இயற்கையை அழித்துத் திருமணங்களை  நடத்துகிறார்கள். சில மணி நேரம் அந்த மண்டபத்தில் ராஜா, ராணியைப் போல இருப்பார்கள். அடுத்த நாள் அந்த மண்டபம் பக்கம் போனால் காவலாளி துரத்தி விடுவார். அப்படிச் செய்யப்படும் திருமணங்கள் ஆயிரம், ஐந்நூறு பேருக்கு மட்டுமே தெரியும். ஆனால் அரவிந்த், பூவிழி திருமணம் 2 கோடி பேருக்குத் தெரியவிருக்கிறது.

இந்து முறைப்படி அக்னி சாட்சியாக வைத்து திருமணம் செய்வோம். மரங்கள்தான் அக்னி. மரங்களை மண்ணெண்ணை, பெட்ரோல் என எதைக் கொண்டு எரித்தாலும் அக்னியாக மாறும். மரம்தான் உண்மையான அக்னி. அதனால் மரங்கள், தண்ணீர், மண் என இயற்கையின் சாட்சியாக இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு திருமண வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். மரங்கள் முளைத்து விதைகள் உருவாகி பறவைகள்  மூலம் பல்கிப் பெருகி செழிப்பை உருவாக்குவதுபோல இவர்களும் செழிப்பாக வாழ்வார்கள். திருமணத்தில் கிடைக்கும் மொய் கவர்கள் முழுவதும் ஏரியின் பாதுகாப்புப் பணிக்குக் கொடுப்பதாக அரவிந்த் தெரிவித்திருக்கிறார். அதனால் மொய்யைப் பணமாகக் கொடுக்க கேட்டுக்கொள்ளுகிறேன்'' என்று புன்னகையோடு கூறி அமர்ந்தார்.

அடுத்து பேசிய காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், ''எல்லோரும் வித்தியாசமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. இவர்கள் செய்திருக்கிறார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையோடு வாழ வேண்டும். அரவிந்த், பூவிழி இயற்கையின் முன்னிலையில் இணைந்திருக்கிறார்கள். இயற்கை எப்போதும் வஞ்சிக்காது. இயற்கைக்கு எப்போதும் அழிவில்லை. இந்தத் தம்பதிகள் இயற்கையைப் போல நீடுழி வாழவேண்டும்'' என்றார்.

திருமணம்

இறுதியாக மைக் பிடித்த 'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜூமுருகன், ''சொல்லை விட செயல் சிறந்தது. செய்து காட்டிருக்கும் இந்தத் தம்பதி சிறந்தவர்கள். இயற்கையை இரண்டு விதமாக நம்மிடமிருந்து பிரிக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தாலும், மன அளவிலும் பிரிக்கப்படுகிறது. அற எழுச்சிக்குப் பிறகு அரசியல் மாற்றம் என்றார் பெரியார். அறச்சீற்றம் அரசியல் மாற்றத்தை நோக்கி நகரும் என்றார் அம்பேத்கர். அந்த மாற்றம் ஒரு தனி மனிதனிடமிருந்து தொடங்க வேண்டும். அது இந்தத் திருமணத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. இந்தத் திருமணத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நாமும் வரும் காலங்களில் நம் வீட்டுத் திருமணங்களை இதுபோல செயல்படுத்த வேண்டும். ஒரு திருமணம் செய்வது மூலம் பாதிக் கடன்காரர்களாகி விடுகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும். இயற்கை என்பது எளிமை. இந்தத் திருமணம் எவ்வளவு எளிமையாகவும் ஏகாந்தமாகவும் நடைபெற்றுள்ளது. அரவிந்த் கொஞ்ச காலம் பியூஸ், சுரேஷ் போன்ற கெட்ட பசங்க கூட சேர்ந்து வழக்கு, சிறை என்று செல்லாமல் குடும்பத்தோடு இருக்க வேண்டும்'' என்று ஜோக்காகப் பேசி நிறைவு செய்தார்.  

இதுபற்றி மணமகன் அரவிந்திடம் கேட்டதற்கு, ''பியூஸ் மனுஸின் சேலம் மக்கள் குழுவில் கடந்த 5 ஆண்டுகளாக இருக்கிறேன். இயற்கைமீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு அதிகம். அதனாலேயே இயற்கையோடு இணைந்து எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் மனைவியாக வரப் போகும் பூவிழியிடமும் கூறினேன். இரு வீட்டார் சம்மதத்தோடு எங்கள் திருமணம் இயற்கை முன்னிலையில் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

இத்திருமணம் அனைவர்  மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மணமக்களுக்கு நம் வாழ்த்துகள்.


டிரெண்டிங் @ விகடன்