கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்!

எரியாத தெருவிளக்குகள், சாக்கடை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை செய்து தராத, கோவை மாநகராட்சியைக் கண்டித்து, சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக, கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தீப்பந்தம்
 

கோவை மாநகராட்சி, ஒண்டிப்புதூர் 59-வது வார்டுக்குட்பட்ட, சிவலிங்கபுரத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  சிவலிங்கபுரம் மற்றும் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 70 மின் கம்பங்கள் எரிவதில்லை என மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால், மின் கம்ப பணிகளை செய்பவர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கவில்லை எனவே, சரி செய்ய முடியாது என தெரிவிப்பதாக குற்றம்சாட்டினர்.

மேலும், சாக்கடை வசதிகள் இல்லாததாலும்,  மழை பெய்தால் வடிகால் இல்லாமல் நீர் தேங்கி நிற்பதாகவும், வடிகாலை தூர்வாரக்கோரி பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தீப்பந்தம்

இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் வரை, மாநகராட்சி விதித்துள்ள குப்பை வரி கட்டப்போவதில்லை என தெரிவித்தனர். மாதம் இரு முறை மட்டுமே குடிநீர் வழங்கி வந்த நிலையில், குடிநீருக்கு நான்காயிரம் ரூபாய் வைப்புத்தொகை கட்டச் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட பிரச்னைகளை எல்லாம் சரி செய்ய வலியுறுத்தி, சிவலிங்கபுரம் மக்கள், இன்று கைகளில் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி நிர்வாகம், இந்தப் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!