வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (04/11/2017)

கடைசி தொடர்பு:13:03 (04/11/2017)

மதுராந்தகம் ஏரியின் நிஜ நிலவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி என்ற பெருமையைக் கொண்டது மதுராந்தகம் ஏரி. 2411 ஏக்கர் பரப்பளவில் மதுராந்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதி உள்ளது. மதுராந்தகம் நகரில் 2853 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியை நம்பியே விவசாயம் நடைபெறுகின்றது. மதுராந்தகம் ஏரியிலிருந்து 18 கிராமங்களில் உள்ள 8262 ஏக்கர் நிலம் நீர்பாசனம் பெறுகின்றன. இரண்டாம் போகத்தில் 1515 ஏக்கர் பரப்பளவு நிலமும், மூன்றாம் போகத்தில் 530 ஏக்கர் விளைநிலமும் பயன்பெறுகின்றன. இதனால் 36 கிராமங்கள் பயன்பெறுகின்றன. மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. சுமார் 600 மில்லியன் கனஅடி நீர் இருக்கிறது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் ஓரிரு நாள்களில் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதன் பிறகே ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படும்.

 

ஏரியைப் பற்றி நன்கு அறிந்தவர்களோ “கடைசியாக 13.11.1985ல் மதுராந்தகம் ஏரி உடைந்தது. 30,515 கனஅடி நீர்தான் அப்போது இருந்த கலங்கல் பகுதியில் வெளியேற்ற முடியும். ஆனால், நிமிடத்துக்கு 2.20 லட்சம் கனஅடி நீர் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டது. ராமர் கோயில் பக்கத்தில் தண்ணீர் வழிந்து வெளியேறியதால் சுமார் 500 சிமென்ட் மூட்டைகளைக் கொண்டு உடைவதை தடுத்தார்கள். ஆனாலும் கலங்கல் பக்கத்தில் இருக்கும் கரை அரிக்கப்பட்டு ஏரி உடைந்தது. மைக் மூலம் அறிவிப்பு செய்து இரவோடு இரவாக மக்களை வெளியேற்றினார்கள்.

கரைகள் உயர்த்தப்பட்டதால் பலமாகவே இருக்கிறது. ஏரி உடைந்துவிடும், மதுராந்தகம் நகரம் மூழ்கிவிடும் என்று ஏரியைப்பற்றி சரியாக தெரியாதவர்கள் வாட்ஸ்அப்பில் செய்தியை பரப்புகின்றனர். தற்போது 26 அடி உயரத்தில் கரைகள் வலுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நீரை வேகமாக வெளியேற்றுவதற்காக இரண்டாவதாக ஒரு கலங்கல் அமைக்கப்பட்டிருக்கின்றது. உபரி நீர் வரும்போது உயர்மட்ட கால்வாய் வழியாக வெளியேற்ற முடியும். தேசிய நெடுஞ்சாலையும் ஏரிக்கு பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் கரை உயர்த்தப்பட்டு உறுதியாக இருக்கின்றது. இதனால் மதுராந்தகம் ஏரி உடைய வாய்ப்பே இல்லை.” என்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க