உலகப் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் - தம்பிதுரை கிண்டல்

அரசை குறை கூறிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உலகப் பயணம் சென்றுள்ளார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிண்டல் அடித்துள்ளார்.

இரண்டு நாள் பெய்த வடகிழக்குப் பருவ மழை சென்னையில் புரட்டிப்போட்டு விட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இதனால் பலர் வீடுகளை காலிசெய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சமூகக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கிவருகின்றனர்.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்பு ஆர்.கே.நகர், கொளத்தூர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிலையில், 36-வது ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிண்டல் செய்துள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை குறை கூறிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உலகப் பயணம் சென்றுள்ளார். உலகப் பயணம் சென்றதுதான் எதிர்க்கட்சி தலைவரின் மக்கள் மீதான அக்கறை" என்று விமர்சித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!