வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (04/11/2017)

கடைசி தொடர்பு:13:35 (04/11/2017)

3 நாள்களில் மழை படிப்படியாகக் குறையும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில நேரங்களில் கனமழை இருக்கும் என்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கில் உள்ளது என்று தெரிவித்துள்ள பாலசந்திரன், காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது என்றும், தமிழகம், புதுச்சேரியில் 2 அல்லது 3 நாள்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். 

அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறில் 27 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என்று கூறிய அவர், திருப்பூண்டியில் 23 செ.மீட்டர் மழையும், வேதாரண்யத்தில் 16 செ.மீட்டர் மழையும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.