'நான் தமிழ் பொறுக்கிதான்!' - சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி!

’டெல்லியில் இருந்து ஒருவர் தமிழ் பொறுக்கி என்றார். அறிவை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்’ என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுக்குமாறு நடிகர் கமல் பேசியுள்ளார். 

சென்னை அடையாறில் இன்று நடந்த விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். “ உழவர்களுடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. நான் உழவன் மகன் அல்ல. உழவின் மருமகன்.  

ஜனநாயகத்தில் நீங்கள் தான் எஜமானர்களாக இருக்க வேண்டும். அந்த உண்மையை மறந்துவிட்டு பணிவு காரணமாகவே அவர்களை தலைவர்கள் என்று நினைத்துவிட்டு நீங்கள் தொண்டர்கள் ஆகிவிட்டீர்கள். சேவகர்கள் ஆகிவிட்டீர்கள். நான் சொல்ல வருவது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொல்லி நமக்கு குடியுரிமை சொல்லித் தந்த இந்த நாட்டில் நாம் மன்னர்களாக வாழ வேண்டும். அதை நீங்கள் செய்யத் தவறிவிட்டிருக்கிறீர்கள். எனவே, உங்களை குற்றம்சாட்ட வந்திருக்கிறேன். ஆறுதல் சொல்ல வரவில்லை. உங்களுடைய பெரும்பொறுப்பு, கடமை ஒரு தலைவனை தேடுவது அல்ல. நியமிப்பது’ என்று பேசினார்.

முன்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்டதமிழர்களை விமர்சித்து,  பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று ட்விட்டரில் பதிவுசெய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல் இன்று பேசியுள்ளார். ‘டெல்லியில் ஒருவர் தமிழ் பொறுக்கி என்கிறார். நான் தமிழ் பொறுக்கி தான். அறிவை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்’ என்று காட்டமாக பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!