டெங்குவைத் தடுக்க குடிநீரில் குளோரினேசன்! - கலெக்டர் ஆய்வு | Karur collector inspects to check chlorination in drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (04/11/2017)

கடைசி தொடர்பு:15:59 (04/11/2017)

டெங்குவைத் தடுக்க குடிநீரில் குளோரினேசன்! - கலெக்டர் ஆய்வு


                            karur

கரூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் இன்று டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு அப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் அளவு பரிசோதனை செய்தார்.

கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு நேரு நகர், விவேகானந்தா தெரு, வ.உ.சி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திருப்பூர் குமரன் தெரு, பாரதியார் தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் இன்று வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,  'இவ்வாய்வின்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உபயோகமற்ற பொருள்களை சேமித்து வைத்துக்கொள்ள கூடாது. வீடுகளில் சுற்றுப்புறப் பகுதிகளை தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், வாரம் ஒருமுறை தொட்டிகளை நன்கு தேய்த்துக் கழுவி சுத்தம் செய்த பின் தண்ணீரை சேமிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடிநீரை காய்ச்சிப் பருகவும், நிலவேம்புக் குடிநீரை பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீரில் குளோரினேட் செய்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இன்று வ.உ.சி தெருவில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரினேசன் அளவு பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாய்வின்போது ஒரு வீட்டில் உபயோகமற்ற தண்ணீர் தொட்டி ஒன்றில் மழைநீர் தேங்கி உள்ளதையும், உபயோகமற்ற பொருள்களையும் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது. அப்பகுதியில் காலியாக உள்ள இடத்தில் புதர் மண்டிக்கிடக்கும் இடத்தின் உரிமையாளர்களுக்கு சுத்தம்செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு விழிப்பு உணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, டெங்கு பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது.


பின்னர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்புக் காய்ச்சல் பிரிவு, பச்சிளம் குழந்தைப் பிரிவு ஆகிய பிரிவில் நோயாளிகளை நேரில் சந்தித்து உடல்நிலை பற்றி கேட்டறியப்பட்டது. மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சமையலறையை தூய்மையாக வைத்துக்கொள்ள பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு, உணவின் தரம் ஆய்வுசெய்யப்பட்டது' என்றார்.