ஏழைகளுக்கான வக்கீலை கடத்திச் சென்று நொறுக்கிய போலீஸ்! | Police has beaten an advocate for no reason and kept in a police station

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (04/11/2017)

கடைசி தொடர்பு:14:53 (04/11/2017)

ஏழைகளுக்கான வக்கீலை கடத்திச் சென்று நொறுக்கிய போலீஸ்!

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த அவரது மனைவியை போலீஸார் அடித்து உதைத்து இருக்கிறார்கள்.

வழக்கறிஞர் செம்மணி

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜரத்தினம் என்ற செம்மணி. இவர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். குறிப்பாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது போடப்பட்ட 300-க்கும் அதிகமான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சுப.உதயகுமாரன், முகிலன் உள்ளிட்டவர்களுக்கும் இவரே வாதாடி வருகிறார்.

இதையடுத்து, அவர்மீது காவல்துறையினர் கோபத்தில் இருந்துள்ளனர். அதனால் அவர்மீது வழக்குத் தொடர வாய்ப்புக் கிடைக்காதா? என்கிற எண்ணத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அவர்மீது வழக்குத் தொடர வாய்ப்புக் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த போலீஸார் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். போலீஸ் வேனில் வந்த சீருடை அணிந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் அவரிடம், ‘வள்ளியூர் டி.எஸ்.பி கூட்டிட்டு வரச் சொன்னார்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

’என்ன விஷயம்? ஏதாவது வழக்கு இருக்கா? என்னை அழைத்துச் செல்வதன் காரணம் என்ன? எனக் கேட்ட வழக்கறிஞர் செம்மணியை திடீரென சரமாரியாகத் தாக்கிய போலீஸார் அவரை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி உள்ளனர். அதனை அவரது மனைவி சரோஜா மற்றும் மகன், மகள் ஆகியோர் எதிர்த்துள்ளனர். அப்போது ஆண் காவலர்கள் சிலர் செம்மணியின் மனைவி சரோஜாவை அடித்து உதைத்துள்ளனர். 

நடந்த சம்பவங்களை படம் எடுக்க முயற்சி செய்த சரோஜாவை கையை முறுக்கிய போலீஸார் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர். இதனால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் செம்மணியைக் கடத்திய போலீஸார் இரவு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களுக்கு கொண்டுசென்று தாக்கியதாகத் தெரிகிறது.

தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள அவர் உவரி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து காவல்துறையினருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கக் கூடாது என போலீஸார் மிரட்டி வருவதாக பச்சைத் தமிழகம் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அக்கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன், உவரி காவல்நிலையத்துக்குச் சென்று வழக்கறிஞர் செம்மணியைப் பார்க்கச் சென்றுள்ளார். வழக்கறிஞர் ஒருவரை காவல்துறையினர் அத்துமீறி இழுத்துச் சென்ற சம்பவம் வள்ளியூர் வழக்கறிஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. 


[X] Close

[X] Close