வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (04/11/2017)

கடைசி தொடர்பு:17:40 (04/11/2017)

திருப்பூர் தனியார் காப்பகத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள்!

திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 3 சிறுமிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியார் சார்பில் இயங்கிவரும் இந்தக் காப்பகத்துக்கு காவல்துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் காவல்துறையால் மீட்கப்பட்ட பல்லடத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் குழந்தைத் திருமண வழக்கில் மீட்கப்பட்ட ஒரு சிறுமியும் இந்தக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தனர். இச்சிறுமியர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு, யாருக்கும் தெரியாமல் காப்பகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் காப்பகத்தின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட காவல் எல்லையான அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள் 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகிறது திருப்பூர் மாநகரக் காவல்துறை.