வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (04/11/2017)

'இங்கே வாகனத்தை நிறுத்தினால் பறிமுதல்'- வாகன ஓட்டிகளை மிரளவைத்த மாநகராட்சி நோட்டீஸ்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவிப்பு விடுத்ததை மீறி நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்மீது எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி அதிரடியைக் கிளப்பியுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் ஆங்காங்கே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் இடநெருக்கடி ஏற்படுகிறது என்று எழுந்த தொடர் புகாரால், பேருந்து நிலையத்துக்கு இருசக்கர நிறுத்த அனுமதியில்லை என மாநகராட்சி ஆணையாளர் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

atert notice affix on parked bike

இந்நிலையில் அறிவிப்பு கொடுத்தும் பேருந்து நிலையத்துக்குள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள்மீது எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சியினர் ஒட்டினர். ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ‘‘புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது. மீறினால் வானகங்கள் பறிமுதல் செய்யப்படும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தூத்துக்குடி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நிறுத்தும் இடத்திலும், பயணிகள் நடந்து செல்லும் வழியிலும் கடைகளுக்கு முன்பாகவும் மரத்தடிகளிலும் என ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பேருந்துகள் வந்து செல்லவும், பயணிகள் நடந்து செல்லவும் மிகுந்த சிரமமாக உள்ளது. அதனால் பேருந்து நிலையத்துக்குள் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதி மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். எனவே, இடநெருக்கடியைத் தவிர்க்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க