கமல் மீது வழக்குப்பதியக் கோரிய மனு: வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் கூற முடியாது என்று கூறிய கமல் மீது வழக்குப்பதியக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடனில் எழுதிவரும் ’என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் கூற முடியாது என்று எழுதியிருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்தநிலையில், இந்துத் தீவிரவாதம் என்று கூறி இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதியக் கோரி வழக்கறிஞர் கமலேஷ் திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்து மதம் தீவிரவாதத்துக்கு உதவுதாகக் கூறியதன் மூலம் சமூகத்தில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இந்தக் கருத்துகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்துக்களின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறியிருந்தார்.

அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்த கமல் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500, 511, 298 295 (ஏ) மற்றும் 505 (சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் கமலேஷ் திரிபாதி, தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். வாரணாசி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின் விசாரணையை நவம்பர் 22-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!