வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (04/11/2017)

கடைசி தொடர்பு:17:42 (04/11/2017)

மழை நிவாரணம்! அமைச்சர்களின் இன்றைய ஒருநாள் பயணம்!

சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 41-ல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் குறைகளைக் கேட்டறிந்தனர். மண்டலம் 7 அம்பத்தூர் பகுதியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்கள். அப்போது, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் உடனிருந்தார்.

சென்னை எழிலகத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வடகிழக்குப் பருவமழைத் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி நிலையத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பாதித்த பகுதிகளுக்குத் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 106 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களைத் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் இயங்கும் 24 மணிநேர பேரிடர் மேலாண்மை மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வடகிழக்குப் பருவமழையையொட்டி பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்கள்
பெறப்படும் விதம் குறித்தும், அவை பதிவு செய்யப்படும் முறை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அந்தத் தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு, அவை சரிசெய்யப்படும் விதம் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

ராயபுரம் மண்டலம் 5-க்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, திரு வி.க தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள அம்மன் கோயில் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உணவுப் பொருள்களை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி, மணலி ஆமுல்லைவாயில்- வைக்காடு சந்திப்பு பகுதியில் கொசஸ்தலை ஆறு வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் கே.மோகன், மணலி மண்டலத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பால்தேவ் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மணலி சடையங்குப்பம் இருளர் காலனியில் அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

பள்ளிக்கரணை காமாட்சி நகரில் வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எஸ்.வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு விரைவாக நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். மேலும் பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் உள்ளவர்களுக்கு இலவச பாய் மற்றும் போர்வைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

அயனாவரம் மண்டலம் 6 அலுவலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பணன் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப்பணிகளைப் பார்வையிட்டு நல்லாறு கால்வாய் தடுப்பை அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

வேளச்சேரி பகுதியில் அமைச்சர் நீலோபர் கபில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலம், வார்டு 143, நொளம்பூர் கால்வாயில் ரொபோடிக் இயந்திரம் மூலம் கால்வாய்களில் செடிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியினை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஆகியோர் உடனிருந்தனர்.