வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/11/2017)

கடைசி தொடர்பு:19:15 (04/11/2017)

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் ஆய்வு!

 தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் இந்திய பாதுகாப்புத் துறையினர்  நவீன கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நவீன வாகனங்கள் மூலம் பாதுகாப்பு குறித்த ஆய்வு தனுஷ்கோடியில்


நாட்டின் எல்லைப்புறங்களில் அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தும் பணிகளில் இந்திய பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாட்டின் தென் கோடி எல்லைப் பகுதியான தனுஷ்கோடி பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பான ஆய்வுகளை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

சமீப காலமாக இலங்கையில் கால் பதித்துவரும் சீனா அங்கிருந்து இந்தியாவுக்கு இடையூறுகளைக் கொடுக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதற்கு ஏதுவாக இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தைச் சீன அரசு குத்தகைக்கு எடுத்துள்ளது. ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வர்த்தக ரீதியிலான பணிகளுக்குப் பயன்படுத்த மட்டுமே சீனாவுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இலங்கை அரசின் தரபில் சொல்லப்பட்டாலும், நாளடைவில் இதைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் சீனா பயன்படுத்தும் என்றே கருதப்படுகிறது. 

இதையடுத்து, இலங்கை எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் கடைக்கோடி எல்லைப்பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும் அதனுள் பாதுகாப்புக் காரணங்களும் அடங்கியிருப்பதாகவே தெரிகிறது. சமீபகாலமாக இந்திய பாதுகாப்பு துறையினர் நவீன ரேடார் வசதிகளைக் கொண்ட வாகனங்களில் இப்பகுதிக்கு வந்து சிக்னல் குறித்த சோதனைகளையும், போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் செல்ல தேவையான வாய்ப்புகள்  குறித்தும் ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிய வருகிறது. இதற்கு ஏதுவாக ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரைப் பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்த இந்திய பாதுகாப்புத் துறையினர், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.