வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (06/11/2017)

கடைசி தொடர்பு:12:00 (06/11/2017)

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தல்! - வெளியே வரும் பூனைக்குட்டி

தலைமைச்செயலகம்

ரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கான வாய்ப்புள்ளதாக பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தனது முழுமையான பதவிக்காலத்தை நிறைவேற்றுமா என்ற கேள்வி மாநிலம் முழுவதிலும் உள்ள சாமான்ய மக்கள் மத்தியிலும்கூட எழுந்துள்ளது.

"எடப்பாடி அரசை மத்திய பி.ஜே.பி. அரசுதான் இயக்குகிறது; நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் மத்திய அரசின் கருத்துக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படுகிறது; தமிழக மக்கள் நலனில் இப்போதைய மாநில அரசுக்கு அக்கறையில்லை" என்று பரவலாகக் குற்றச்சாட்டு எப்போதுமே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பிரச்னையில் மாநில அரசு முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரண்டாகப் பிளவுபட்ட அ.தி.மு.க. பல்வேறு அணிகள் மாறி, எடப்பாடியுடன் ஓ.பி.எஸ். இணைந்து ஒரே அணியாகச் செயல்படும் நிலையில், இந்த அரசு நீடிக்காது என்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தொடர்ந்து கூறிவருகிறார்.

தமிழக சட்டசபைக்கு 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பின்னர், 32 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து நடத்திய சாதனையை மக்களும், அ.தி.மு.க-வினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்குள், அ.தி.மு.க. ஆட்சியமைத்த  நான்கு மாதத்திற்குள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள்கள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எதிர்த்த அனைத்துத் திட்டங்களையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்குப் பின் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுகள், ஒப்புக்கொண்டு நிறைவேற்றி வருகின்றன. மக்களைப் பாதிப்படையச் செய்துள்ள ஜி.எஸ்.டி வரி போன்ற எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்காமல், மத்திய அரசின் கருத்து எதுவோ, அதுவே தங்களின் கருத்தும் என்றரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இதற்கிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, கட்சித் தாவல் தடை மற்றும் கொறடா உத்தரவின்றி ஆளுநரைச் சந்தித்தது போன்ற காரணங்களை முன்வைத்து, சபாநாயகர் ப.தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மழை,வெள்ளப் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இல.கணேசன்

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், தமிழக சட்டசபைத் தேர்தல் பற்றி கருத்துத் தெரிவித்து இருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பி.ஜே.பி. அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது என்று தொடர்ந்து, குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் தங்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஒருபடி மேலே போய் 'பிரதமர் மோடி இருக்கும்வரை எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று உளறிக் கொட்டினார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், 2019-ம் ஆண்டு தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை நன்றாக உள்ளது என யாரும் சொல்ல முடியாது. இந்த நிலைக்கு ஜெயலலிதாவின் திடீர் மரணமும், அதனால் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும் காரணம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பலரும் துடிக்கிறார்கள். சிலர் திரைப்படத்துறையில் இருந்தும் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசு நேர்மையான நடத்தி வருகிறது. தமிழக அரசின் பின்னணியில் பி.ஜே.பி-யோ, மோடியோ இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து" என்றார். 

"தமிழகத்தில் பி.ஜே.பி. புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது. அ.தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர்காய நினைக்கிறது. மத்திய அரசை எதிர்த்து தற்போதுள்ள தமிழக அரசு எதுவும் கருத்துத் தெரிவிப்பதில்லை" என்றெல்லாம் பரவலாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு என்று இல. கணேசன் கூறியிருக்கும் கருத்து, அத்தகைய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எப்படியோ, நாடாளுமன்றத் தேர்தலோடு, தமிழக சட்டசபைத் தேர்தலும்  நடைபெறும் என்ற பேச்சுகள் இப்போதே எழத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, ஐந்து ஆண்டுகள் தொடரும் என்று தெரிவித்துவரும் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸூம் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்