டெங்கு கொசு வளர்த்த டயர் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர்!

டெங்கு பரப்பும் நிறுவனம்

நெல்லையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்த டயர் நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பில் இருந்து மாவட்டத்தை மீட்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுகாதாரத் துறையினர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலை அடுத்த ஒரு வாரத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2,000 பணியாளர்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகள் தோறும் சென்று அவர்கள் டெங்கு விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்கிறார்கள். 

சுகாதார சீர்கேடு

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தினமும் காலையில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இன்று காலை முதல் ரெட்டியார்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள வீடுகளில் டெங்கு கொசுக்கள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தார். தண்ணீர் தேக்கப்பட்டு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டையில் டயர்களுக்கு ரீடிரேடிங் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆங்காங்கே கிடக்கும் டயர்கள் மற்றும் ரீ பட்டன் போடும்போது தண்ணீரில் நனைய வைக்கப் பயன்படும் தொட்டி போன்றவற்றில் டெங்கு கொசுக்களின் முட்டைகள் மற்றும் புழுக்கள் இருப்பதை சுகாதாரப் பணியாளர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்தனர். அதையடுத்து அந்த நிறுவனத்துக்கு இரண்டு முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி அந்த நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள டயர்களில் கொசு முட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்ட அந்த நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த ஆட்சியர், டெங்கு ஒழிப்புப் பணிகள் முடிவடையும் வரையிலும் அந்த நிறுவனம் செயல்படவும் தடை விதித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு நகர் நல அலுவலரான பொற்செழியன் சீல் வைத்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!