வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (04/11/2017)

கடைசி தொடர்பு:21:12 (04/11/2017)

கடலூர் கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவு: ஆய்வு நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு மத்திய அரசு உத்தரவு!

கடலூர் கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவு நீர் குறித்த புகாரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல்துறை உத்தரவிட்டுள்ளது.

கடலூர் கெடிலம் ஆற்று தடுப்பணை

இதுகுறித்து புகார் கொடுத்திருக்கும் நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் நிஜாமுதீன் கூறுகையில்,’கடலூர் கெடிலம் ஆற்றில் கோண்டூர் பகுதியில் 18 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இத்தடுப்பனையில், இ.ஐ.டி. பாரி மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சி கழிவுகள் பெருமளவில் கலக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி மாசுபட்டு, குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அத்தோடு, அந்த தடுப்பணையில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதால் காற்று மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் பல முறை மனுகொடுத்தோம். அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதனால், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு புகார் கொடுத்தோம். இப்புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமானது, எங்கள் நிர்வாகிகள் முன்னிலையில்தான் தடுப்பணையில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தவேண்டும். அதுமட்டுமில்லாமல், இக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கருத்தையும் பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் இதுதொடர்பான உண்மை தன்மை தெரியும். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம், இ.ஐ.டி.பாரி நிவாகத்திற்க்கு அடிபணிந்து இதை பூசிமெழுகிவிடும். அத்தோடு, இக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் குடிநீருக்காக போடப்பட்ட போர்வெல் தொகையினை நஷ்டஈடாக அவர்களுக்கு கொடுக்கவேண்டும். அதற்கு பசுமை தீர்ப்பாயத்தில் இடம் இருக்கிறது’ என்றார்.