கடலூரில் கனமழை... பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி!

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் கடும் அவதியுடன் வீட்டுக்கு திரும்பினர். குறித்த நேரத்தில் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்களும் கவலையடைந்தனர்.

கடலூர் கனமழை


வடகிழக்கு பருவ மழையானது, கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு பெய்துகொண்டிருக்கிறது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி என பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது. இருந்தபோதிலும், காலையில் மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால் மாவட்ட நிர்வாகமானது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள், காலையில் நிலவிய தட்வெப்ப சூழ்நிலையால் மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக குடை அல்லது ரெயின்கோட் போன்றவை கையில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. 

ஆனால், மதியம் 2 மணிக்குமேல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டே வாகனத்தை ஓட்டிச் சென்றனர். பள்ளி விட்டதும் மாணவ-மாணவிகள் கடும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இதனால் சைக்கிள், பேருந்து மற்றும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. சென்னையில் மழையில் அறுந்துகிடந்த மின்கம்பியால் இரண்டு சிறுமிகள் இறந்துபோன சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிதுடித்தனர். பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வந்த பிறகே அவர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!