வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (05/11/2017)

கடைசி தொடர்பு:07:15 (05/11/2017)

’வழக்கறிஞர் செம்மணியை கட்டி வைத்து அடித்த போலீஸார்’ - வேதனைப்படும் சுப.உதயகுமாரன்

வழக்கறிஞர் செம்மணியை காவல்துறையினர் கட்டிவைத்து அடித்து உதைத்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக சுப.உதயகுமாரன் வேதனை தெரிவித்தார். இந்த மனித உரிமை மீறலை அவர் கண்டித்துள்ளார்.

வழக்கறிஞர் செம்மணி

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணி காவல்துறையினரால் 3-ம் தேதி நள்ளிரவில் கடத்திச் செல்லப்பட்டார். அதனைத் தடுக்க முயற்சித்த அவரது மனைவி சரோஜாவின் கையை முறுக்கிய போலீஸார் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றனர். எதற்காக அவரை இழுத்துச் சென்றார்கள் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, இரவு முழுவதும் அவரை எங்கே வைத்து இருக்கிறார்கள் என்பதையும் போலீஸார் தெரிவிக்க மறுத்து விட்டனர். இன்று பகலிலும் அவரை வைத்திருக்கும் இடத்தை போலீஸார் தெரியப்படுத்தவில்லை. பிற்பகலில் அவர் உவரி காவல்நிலையத்தில் இருப்பது தெரியவந்ததால் வழக்கறிஞர்கள் அந்த காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனாலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் முன்வரவில்லை.

செம்மணி

இதையடுத்து நீதிமன்றம் ஒரு வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, செம்மணியை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அந்த ஆணையைப் பெற்றுக்கொள்ள போலீஸார் மறுத்தனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்நிலையத்தில் இருந்த வழக்கறிஞர் செம்மணியை பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப.உதயகுமாரன், ‘’வழக்கறிஞரான செம்மணி சாமன்ய மக்களுக்காக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் வாதாடுபவர். எனக்காகவும் அவரே வாதாடிவருகிறார். அவரை நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணெதிரில் அடித்து உதைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முகிலனை இதே போலவே ரகசியமாக போலீஸார் கடத்திச் சென்றார்கள். அதே நிலைமை மீண்டும் உருவாகி இருக்கிறது. அவரை இழுத்து வந்த போலீஸார் அவரது கைகளைக் கட்டி வைத்து இரவு முழுவதும் அடித்துள்ளார்கள். அவரது வாயில் செருப்பைக் கொடுத்து கொடூரமான முறையில் போலீஸார் தாக்கியதாக அவர் தெரிவித்தார். அதில் அவரது கால்கள் வீங்கி விட்டன. ஒரு காலின் சுண்டு விரல் எலும்பு உடைந்திருக்கிறது. அந்தக் காலில் காயம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் சொட்டுகிறது. ஆனால் அவருக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை. 

சுப.உதயகுமாரன்

ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலைமை என்ன? உடனடியாக தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், போலீஸார் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வேதனையுடன் தெரிவித்தார்.