தொடர் மழையால் குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! - அருவிகளில் குளிக்கத் தடை

வெள்ளம் - குளிக்கத் தடை

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாகக் கொட்டுகிறது. ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியது. மெயின் அருவில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

அருவிகளில் கொட்டிய வெள்ளம் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டது. போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதும் பொதுமக்களை அருவிக்கு அருகில் செல்லவும் அனுமதிக்கவில்லை. அதனால் ஆர்வத்துடன் குளிக்க வந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், காலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

பழைய குற்றாலம்

தொடர் மழையால் அருவிகளில் வெள்ளம் குறையவில்லை. எனவே, அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படவில்லை. இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் வெள்ளப் பெருக்கு குறையத் தொடங்கி இருக்கிறது. அதன் காரணமாக அந்த அருவியில் மட்டும் காவல்துறையின் பாதுகாப்புடன் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அருவியின் ஓரத்தில் மட்டுமே நின்று குளிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டுடன் பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!