வாரம் ஒரு மூலிகை! அறிவியல் மையத்தின் அட்டகாச திட்டம்

மூலிகை விழிப்பு உணர்வு

நெல்லை அறிவியல் மையத்தில் வாரம் ஒரு மூலிகைகுறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு அளிக்கப்படுவதுடன், அந்த மூலிகையை இலவசமாக வழங்கி, வீட்டில் வளர்க்கச் செய்யும் முயற்சியைத் தொடங்கி உள்ளனர்.

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் உலகத் தமிழ் மருத்துவக் கழகம் ஆகியவை இணைந்து ’மூலிகை முற்றம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் மைய உதவியாளர் லெனின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பேசிய உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவரான மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ், வல்லாரை மூலிகையை அறிமுகம் செய்தார். 

வல்லாரை இலைகளின் மருத்துவ குணங்கள், அதனை சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பு அடைவது பற்றியும் அவர் விளக்கிக் கூறினார். வல்லாரை இலையை ஒரு மணி நேரம் வெயிலிலும் பின்னர் நிழலிலும் காய வைத்து பொடியாக்கி, அதனை ஒரு மண்டலம் தேனில் கலந்து சாப்பிட வேண்டும். பின்னர் 48 நாள்கள் இடைவெளி விட்டு அடுத்த 48 நாள்களுக்கு சாப்பிடலாம். இப்படி மூன்று முறை சாப்பிட்டால் மூளை புத்துணர்வு பெறுவதுடன் உடலில் உள்ள ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களும் அகலும் என்பதை எடுத்துக் கூறினார்.

வல்லாரைப் பொடியைப் பயன்படுத்தியவர்களின் அனுபவம் பயனுள்ளதாக அமைந்தது. அத்துடன், வல்லாரை இலையின் பிற மருத்துவ உபயோகங்கள் பற்றி பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வல்லாரை செடி இலவசமாக வழங்கப்பட்டது. அதனை வீட்டில் தொட்டியில் கூட வளர்க்கலாம் என எடுத்துக் கூறப்பட்டது.

சித்த மருத்துவர்

இந்த மூலிகை முற்றம் நிகழ்ச்சி பற்றி டாக்டர். மைக்கேல் ஜெயராஜிடம் கேட்டதற்கு, ’’நமது வீடுகளில் மூலிகை பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.முன்பெல்லாம் கிராமங்களில் இருப்பவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் உரிய மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்தார்கள். இப்போது அதன் பயன்பாடு குறைந்ததன் காரணமாகவே பல்வேறு நோய்களில் மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். 

ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 30 மூலிகைகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள், பயன்பாடுகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்திவருகிறோம். 30 மூலிகைகளை வீட்டில் வளர்த்து பயன்படுத்தத் தெரிந்து இருந்தாலே 90 சதவிகித நோய்களில் இருந்து தப்ப முடியும். அதனை பொதுமக்களிடம் தெரிவிக்க  மாவட்ட அறிவியல் மையத்துடன் இணைந்து மூலிகை முற்றம் நிகழ்ச்சியை நடத்திவருகிறோம். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு மூலிகையை அறிமுகப்படுத்துவதுடன் அதனை இலவசமாகவும் வழங்குகிறோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!