வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/11/2017)

கடைசி தொடர்பு:07:50 (06/11/2017)

’அன்று கர்மவீரர் செய்ததை, நாளை நம் தர்மவீரர் செய்வார்’ - உடுமலையில் பிரேமலதா பேச்சு

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் 35 ஆண்டுகால கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களை உடனே  அமல்படுத்த வலியுறுத்தி தே.மு.தி.க சார்பில் இன்று உடுமலைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

முதலில் பேசிய பிரேமலதா, "விவசாயமும், நெசவும்தான் தே.மு.தி.கவுக்கு முக்கியம். முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கொண்டுவந்த பி.ஏ.பி திட்டத்தின் மூலம், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூனக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி, உப்பாறு ஆகிய ஒன்பது அணைகள் கட்டப்பட்டன. ஆனைமலை ஆறு, நல்லாறு அணைகள் மட்டும் கட்டப்படவில்லை. அதற்குப்பின் வந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள்கூட அன்றைய கேரள அரசுடனான பி.ஏ.பி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அணைகளை கட்ட முன்வரவில்லை.

அப்போதே, இட்டலி ஆற்றின் குறுக்கே ஆனைமலையாறு அணையை கட்டியிருந்தால் 21 1/2 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்குக் கூடுதலாக கிடைத்திருக்கும். அதேபோன்று நல்லாற்றில் அணை கட்டியிருந்தால் 71/2 டி.எம்.சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். ஆனால், தமிழகத்தை மாறி மாறி ஆட்சிசெய்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகளின் அலட்சியப் போக்கால் இன்றுவரை அந்த பி.ஏ.பி ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல், கொங்கு மண்டல விவசாயம் இன்று பரிதவித்துக்கிடக்கிறது. குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெருவாரியான தென்னை விவசாயம் முடங்கிப்போய் கிடக்கிறது. இனி வரும் பொதுத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளுக்கும் நாம் சரியான பாடத்தைப் புகட்டியாக வேண்டும். தே.மு.தி.க-வின் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டு அன்று கர்ம வீரர் காமராஜர் செய்தவற்றை, நம் தர்ம வீரர் விஜயகாந்த் செய்துகாட்ட வேண்டும்.

விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரிவதேயில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படிப் புரிந்தால் மட்டும், அதைக் கேட்டு தமிழகத்துக்கு நன்மை செய்துவிடுவாரா அவர். தே.மு.தி.கவையும், அதன் சின்னத்தையும் முடக்கிவிட வேண்டும் என்று துடித்தார்கள். ஆனால், இன்று அவர்களின் கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் முடங்கிப்போய் இருக்கிறது

கந்துவட்டி, டெங்கு நோய், சென்னையில் தேங்கிய மழைநீர், ஜி.எஸ்.டி, பண மதிப்பு இழப்பு என மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தகுதியற்ற அ.தி.மு.க அரசு தூக்கியெறியப்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலில் தே.மு.தி.க தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தே தீரும்'' என்றார்.


பின்னர் பேசிய விஜயகாந்த், " நான் உழவு குடும்பத்தில் பிறந்தவன். உழவர்களின் தேவை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது கொங்கு மண்டல விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியிடம் சுத்தமாக நிர்வாகத் திறமை என்பதே இல்லை. இன்றைய அ.தி.மு.க ஆட்சியின்மீது தமிழக மக்கள் பெருங்கோபத்தில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நலனைக் காப்பதற்கும், தமிழகத்தை முன்னேற வைப்பதற்கும் உண்டான தகுதி தே.மு.தி.கவுக்கு மட்டுமே உண்டு'' என்றார்