'தாமரையுடன், இரட்டை இலை இணைய வேண்டும்' - அ.தி.மு.க எம்.எல்.ஏ பேச்சு!

தாமரையுடன் இரட்டை இலை இணைந்து செயல்பட வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும், தாமரை உடன் இரட்டை இலை கூட்டணி அமைக்க வேண்டுமெனவும் கோவை சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ கனகராஜ்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், சர்ச்சைக் கருத்துகளை கூறுவது வாடிக்கையாகி விட்டது. இந்தப் பட்டியலில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனராஜுக்கு முக்கிய இடம் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. இதை சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் தொடங்கிவைத்தார். கோலப்போட்டியில், தாமரை உடன் கூடிய இரட்டை இலைச் சின்ன கோலத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.

எம்.எல்.ஏ கனகராஜ்

இதையடுத்து பேசிய அவர், “தாமரையுடன் இரட்டை இலை இணைந்து செயல்பட வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். எனக்கும் அதுதான் விருப்பம். இந்தக் கூட்டணி உருவாகுமா, இல்லையா என தெரியாது என்றாலும், இரட்டை இலை மற்றும் தாமரை கூட்டணி உதயமாக வேண்டுமென்பது என்னுடைய கருத்து” என்றார்.

இவர் ஏற்கெனவே, ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல் நிலவியபோது, இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலைக்கு, தமிழக அரசுதான் காரணம் என்று கனகராஜ் கூறியிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!