’கமலின் அறிவிப்புகள் விளம்பரம் தேடுவதற்கு மட்டுமே’: அர்ஜுன் சம்பத்

"தமிழக ஏரிகளைத் தூர் வாருவோம் என கமல்ஹாசன் கூறுவது வெற்று அறிவிப்பு.  விளம்பரம் தேடவே இவ்வாறு அறிவிக்கிறார்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன்சம்பத், “கமல்ஹாசன் சென்ற முறை தூய்மை இந்தியா அமைப்புடன் சேர்ந்து அவரது பிறந்த நாளை கொண்டாடும்போது ’நான் கேக் வெட்ட மாட்டேன் லேக் வெட்டுவேன்’ எனக் கூறினார். ஆனால், இதுவரையிலும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல தற்போது ’எனது ரசிகர்கள் ஏரியை தூர்வார உள்ளனர். விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருப்பது வெறும் வெற்று அறிவிப்பு. விளம்பரம் தேடுவதற்காகவே கமல் இவ்வாறு அறிக்கை விடுகிறார்.

கேரளா முதல்வர் அறிவித்ததுபோல தமிழகத்திலும் விபத்தில் சிக்கியவர்களை தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவம் செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும். கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்” எனக் கூறினார் அர்ஜூன் சம்பத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!