வெளியிடப்பட்ட நேரம்: 23:11 (05/11/2017)

கடைசி தொடர்பு:08:42 (06/11/2017)

எளிமையான முறையில் கொண்டாடப்பட்ட கலாம் சகோதரரின் 101-வது பிறந்தநாள்..!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் சகோதரரின் 101-வது பிறந்தநாள் விழா, எளிமையான முறையில் கொண்டாடபட்டது. 
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உடன்பிறந்த அண்ணன் முத்து முகம்மது மீரா மரைக்காயர் ராமேஸ்வரத்தில் வசித்துவருகிறார். கலாம் தனது அண்ணன்மீது அதிக பாசம் கொண்டவர். அதன் விளைவாகத் தனது அண்ணன் மரைக்காயரின் 100-வது பிறந்த தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தார்.  அந்தப் பிறந்தநாளில் அவருக்கு பரிசளிப்பதற்காக வாசனைத் திரவியங்கள் அடங்கிய சந்தனப் பேழை ஒன்றையும் நீண்ட காலமாக பாதுகாத்துவந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக கலாம் மறைந்ததால், அவரது ஆசை நிறைவேறாமல் போனது.

101 வது பிறந்த நாளில் கேக் வெட்டிய கலாம் சகோதரர் மரைக்காயர்


இந்நிலையில், மறைந்த கலாமின் விருப்பப்படி அவரது சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்தநாள் விழா, கடந்த ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கலாம் தனது அண்ணனுக்காக பாதுகாத்து வைத்திருந்த வாசனைத் திரவியங்கள்கொண்ட சந்தனப் பேழை அவரிடம் வழங்கப்பட்டது.

உறவினர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய கலாம் சகோதரர்


கலாம் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அவரது சகோதரரின் பிறந்தநாள் விழா, இந்த ஆண்டு மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது. மரைக்காயரின் 101-வது பிறந்த தினமான இன்று, அவரது இல்லமான ஹவுஸ் ஆப் கலாமில் உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினா,ர் கலாமின் சகோதரர்.  அதைத் தொடர்ந்து, சிறப்புத் தொழுகையும் செய்தனர். இந்நிகழ்ச்சியில், மரைக்காயரின் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் சேக், சலீம் மற்றும் உறவினர்கள் பங்கேற்று, மரைக்காயரிடம் ஆசிபெற்றனர்.