வெளியிடப்பட்ட நேரம்: 00:22 (06/11/2017)

கடைசி தொடர்பு:08:35 (06/11/2017)

மதுரையில் இறுதிச் சடங்கில் பங்கேற்று சுடுகாட்டைச் சுற்றிப் பார்த்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்..!

சுருகாடு

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், அரிட்டாபட்டி சிவன் கோயில் எனச் சுற்றிப்பார்க்க இன்னும் பல இடங்களை அடுக்கலாம். தற்போது அந்த லிஸ்ட்டில் மதுரையின் ஃபேமஸ் சுடுகாடான தத்தநேரி சுடுகாடும் வந்துவிடும் போல என்று நகைத்து ஆச்சர்யப்படவைத்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகளான 10 பேர் கொண்ட குழு ஒன்று, தொடர்ச்சியாக மதுரையைச் சுற்றிப் பார்த்துவருகிறது.

அப்போது, வைகை ஆற்றை ரிக்‌ஷாவில் பயணித்துக்கொண்டே பார்த்துள்ளனர். அப்போது, தத்தநேரி சுடுகாட்டுக்கு இறுதிச் சடங்குசெய்ய ஒருவரின் உடலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்டம், பாட்டத்தோடு கொண்டுசென்றுள்ளனர். அப்போது, பறை இசையில் பரவசம் அடைந்த அந்த அமெரிக்கப் பயணிகள், அந்த இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். தத்தநேரி சுடுகாட்டில் செய்த இறுதிச் சடங்குகளைக் கவனித்துள்ளனர். சுடுகாட்டில் கலயம் உடைப்பது, முடி இறக்குவது, வாய்க்கரிசி போடுவது என சுடுகாட்டில் நடந்த அத்தனை சடங்குகளையும் வியந்து பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்கக் குழு தத்தநேரி சுடுகாட்டைச் சுற்றிப்பார்த்தது, சுடுகாடுகூட சுற்றுலாத் தலமாக மாறிவிட்டதா என்று தோன்றவைக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அந்த அமெரிக்க சுற்றுலாக் குழுவைச் சேர்ந்த மேரிமோ கூறுகையில் "மதுரையில் இந்த இறுதிச்சடங்கைப் பார்த்தது மிகவும் பிரமிப்பாக இருந்தது. இறந்த உடலை கடவுள் போல மதித்து சடங்குகள் செய்ததில் கலாசாரத்தின் சாயல் வெளிப்பட்டது. தமிழர்களின் கலாசாரம் இறுதிச்சடங்கு வரை பயணிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது' என்று தெரிவித்தார்.