‘கவனம்..!’ சென்னையில் பத்திரிகைகளுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை

தினத்தந்தி பவளவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி

“அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள் பாடுபட வேண்டும்” என ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

‘தினத்தந்தி’ பவள விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மலரை பிரதமர் மோடி வெளியிட்டார். 

விழாவில் அனைவரையும் வரவேற்று ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ‘தினத்தந்தி’ செய்துள்ள சேவைகளுக்கும், சாதனைகளுக்கும் இந்த மேடையில் வீற்றுள்ள புகழ்பெற்ற மேன்மைமிக்கவர்களே சான்றாகும். எங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் 1965-ம் ஆண்டுமுதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி கல்வித் துறைக்கும் நாங்கள் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளோம்.‘தினத்தந்தி’ யாருக்கும் சாதகமாக இல்லாமல் அல்லது பாரபட்சம் பார்க்காமல் நல்ல, சிறந்த பத்திரிகையாகத் திகழ நல்லெண்ணம் கொண்டவர்களும், உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும் இங்கிருப்பது எங்களது மன உறுதிக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது” என்றார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பாமர மக்களைப் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய  ‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் கலந்துகொள்வதில் பெருமைகொள்கிறேன். நமது பாரதப் பிரதமர் தைரியம், அன்பு, பொறுமை ஆகியவற்றின் வடிவமாகவே அவர் திகழ்கிறார். பல தொலைநோக்கு மற்றும்  சீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திட நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்தியாவைப் புதிய யுகத்துக்குக் கொண்டுசெல்வார் என்று நம்பி மக்கள் வழங்கிய பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் நமது திருநாட்டுக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். இத்தகைய பெருமைமிக்க நமது பாரதப் பிரதமர் முன்னிலையில் இந்த விழா நடைபெறுவது என்பதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே நான் கருதுகிறேன். 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக இருப்பது ஆட்சி அதிகாரம், அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம் மற்றும் பத்திரிகைகள் ஆகும். பத்திரிகைத் துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கிக்கொண்டிருக்கிறது. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க அரசாங்கமும், பத்திரிகைத் துறையும் வண்டியின் இரு சக்கரங்கள்போல இணைந்து செயல்பட வேண்டும். ‘தினத்தந்தி’ நாளிதழ் தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனை உள்ள நாளிதழ் என்ற பெருமையைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டு வருகிறது. பத்திரிகைகள் தன்னலம் கருதாமல் நடுநிலைமையுடன் செயல்படவேண்டும்” என்றார்.

“அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தி 75-வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தமிழில் பேசி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “எளிய முறையில் செய்திகளைப் புரியும் வண்ணம்கொடுப்பது ‘தினத்தந்தி’-யின் தனித்துவம். தமிழகம் தவிர, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ‘தினத்தந்தி’ பிரசுரம் ஆவது சிறப்பு. எளிமையாகச் செய்திகளைத் தருவதால் ‘தினத்தந்தி’ மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்துக்குக் காரணமாக இருந்தன. பிராந்திய மொழிகளில் வெளியான பத்திரிகைகளைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சமடைந்தனர். அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்பட்ட தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது. ஆனால், 75 ஆண்டுகளைக் கடந்து செய்திகளைத் தந்தியாக ‘தினத்தந்தி’ தினமும் கொடுத்துவருகிறது.

தற்போது பத்திரிகைகள் செய்திகளை மட்டும் தாங்கி வருவதில்லை. புதிய திசைகளையும் புதிய உலகங்களையும் காட்டும் கருவியாகப் பத்திரிகைகள் உள்ளன. பத்திரிகைத் துறையில் இப்போது தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. சமூகத்தின் மனசாட்சியாகப் பத்திரிகைகள் இருக்க வேண்டும். அரசாங்கத்தைச் சுற்றியே செய்திகள் இருக்காமல் 125 கோடி மக்களைச் சுற்றியும் செய்திகளைத் தரவேண்டும். ஊடகங்கள் ஒவ்வொரு செய்தியிலும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட வேண்டும். தன்னலம் கருதாமல் நடுநிலையோடு பத்திரிகைகள் செயல்பட வேண்டும். தமிழக வெள்ள நிவாரணப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளைச் செய்யும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!