'வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கடனை அடைக்க முடியவில்லை'- கலெக்டரிடம் முறையிட்ட டிராக்டர் உரிமையாளர்கள்

வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி, டிராக்டர் ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

டிராக்டரில் மணல் எடுக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கரை ஆற்றில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு சவுடு மண் மற்றும் மேட்டு மண் எடுத்து விற்பனைசெய்யும் தொழிலில் இப்பகுதியில் உள்ள டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே, பொதுப்பணித் துறையின்மூலம் அரசே மணல் குவாரி அமைக்க முன்வந்ததால், மணல் விற்பனையில் ஈடுபட்டுவந்த டிராக்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக இத்தொழிலை நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மணல் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் ஆர்.எஸ்.மங்களம் பகுதி டிராக்டர் உரிமையாளர்கள்.  மேலும், கடந்த 4 ஆண்டுகளாகப் பருவ மழையும் பொய்த்துவிட்டதால், டிராக்டர் வாங்குவதற்காகப் பெற்றிருந்த கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமலும் சிரமப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், அரசு விதிகளின்படி தங்களுக்கு மணல் எடுத்துச்செல்ல அரசு குவாரி மூலமோ அல்லது நேரடி ஏலம்மூலமோ அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!