சென்னைப் பல்கலைக்கழகம் டூ கோபாலபுரம்... பயணத்தில் மோடி செய்த ‘திடீர்’ மாற்றம்!

மோடி கருணாநிதி

சென்னைப் பயணத்தின் திடீர் திருப்பமாகத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் சென்னைப் பயணத்திட்டத்தில் மு.கருணாநிதியைச் சந்திக்கும் நிகழ்ச்சி திடீரென்று சேர்க்கப்பட்டது. மோடி செய்த இந்த மாற்றம் பா.ஜ.க, தி.மு.க-வினருக்கு சர்ப்ரைஸ் ஆனது. இதனால், தி.மு.க-வினர் உற்சாகமடைந்து கோபாலபுரத்தில் குவிய ஆரம்பித்துவிட்டனர். தன்னைப் பார்க்க வந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கருணாநிதி.

பிரதமர் நரேந்திர மோடி, ‘தினத்தந்தி’ பவளவிழாவில் கலந்துகொள்ள தனி விமானத்தில் இன்று காலை சென்னை வந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள்குறித்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் உயர் அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனது பயணத்திட்டத்தை வாங்கிப் பார்த்த மோடி, ‘‘சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்க வேண்டும்’’ என்று சொன்னார். இதையடுத்து, அந்தத் தகவலைத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உடனடியாகச் சொன்னார்கள். அவரும்,  அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் கோபாலபுரம் வருகையை இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழக பி.ஜே.பி. மேலிடப் பார்வையாளரான முரதளிதர் ராவ் உறுதிசெய்தார்.

 மோடி ஸ்டாலின் கனிமொழி

இந்நிலையில், டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த மோடியை விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் கடலோரப் பாதுகாப்புப் படை தளத்தில் இறங்கிய அவர், கார் மூலம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்தார். ‘தினத்தந்தி’  பவளவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மோடி, அந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 12 மணிக்குக் கோபாலபுரத்துக்குக் கருணாநிதியைப் பார்க்க காரில் புறப்பட்டார். பல்கலைக்கழகத்துக்கு வெளியே நின்றிருந்த பி.ஜே.பி. தொண்டர்கள் மோடியை வரவேற்றுக் கைகளை அசைத்ததோடு, தங்கள் கைகளில் இருந்த பி.ஜே.பி. கொடிகளை உயர்த்திக் காட்டியும் வரவேற்றனர்.

மோடி தயாளு அம்மாள்

இந்நிலையில், 12.15 மணிக்கு கோபாலபுரம் வந்தார் மோடி. வீட்டு வாசலில் நின்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கனிமொழி எம்.பி. சால்வை கொடுத்து பிரதமரை வரவேற்றார். தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், பி.ஜே.பி. தலைவர் தமிழிசை ஆகியோரும் அங்கு இருந்தனர். இந்த வரவேற்பு முடிந்தவுடன், மோடியை கருணாநிதி இருக்கும் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார் ஸ்டாலின். அங்கு மோடியை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வரவேற்றார். தன்னுடைய சேரில் உட்கார்ந்து இருந்த கருணாநிதி கையைப் பிடித்து உடல்நலம் விசாரித்தார் மோடி. கருணாநிதி புன்னகைத்தார். 

கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடமும் உடல்நலம்குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பிரதமரின் வருகைகுறித்து கருணாநிதியிடம் எடுத்துச் சொன்னார் ஸ்டாலின். இந்த நலம் விசாரிப்பு சுமார் 10 நிமிடங்கள் நடந்தன. அப்போது, ‘முரசொலி’  பவளவிழா மலர், தாம் எழுதிய ‘குறளோவியம்’ நூலின் ஆங்கிலப் பதிப்பு ஆகிய நூல்களைப் பிரதமர் மோடிக்குக் கருணாநிதி பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார். அதன்பிறகு, மோடி அங்கிருந்து கிளம்பினார். மோடியின் வருகையை முன்னிட்டுக் கோபாலபுரத்தில் ஏராளமான தி.மு.க-வினர் திரண்டிருந்தனர்.

கருணாநிதி

அந்தத் தொண்டர்களும் கருணாநிதியைப் பார்க்க ஆசைப்பட்டனர். ‘கலைஞர் வாழ்க’  என்று அவர்கள் அங்கு நின்றவாறு கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். இதைக் கவனித்த ஸ்டாலின், மாடியில் இருந்த கருணாநிதியிடம் சொல்லி அவரைக் கீழே அழைத்து வந்தார். வீட்டு வாசலில் வீல் சேரில் இருந்தவாறே தொண்டர்களைப் பார்த்துக் கையை உயர்த்தி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மோடியின் திடீர் வருகையும் தொண்டர்களைக் கருணாநிதி சந்தித்ததும் இன்று நடந்த சர்ப்ரைஸ். தி.மு.க-வினருக்கு இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.

பிரதமர் மோடி திடீரென கருணாநிதியைச் சந்தித்ததுகுறித்து பத்திரிகையாளர்கள் தமிழிசையிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், ‘‘மூத்த தலைவர் கலைஞர். அவர் இப்போது உடல் நிலை தேறி வருகிறார். இன்று சென்னை வந்த பிரதமர் மோடி அவரைச் சந்தித்தார். இதில் அரசியல் இல்லை. மூத்தவர்களைப் பார்த்து நலம் விசாரிப்பது நமது கலாசாரம். கோபாலபுரம் வந்த பிரதமரை புரிந்துகொண்டார் கலைஞர். புன்னகைத்தார். பிரதமருக்கு கலைஞர் சார்பில் புத்தகம் கொடுக்கப்பட்டது’’ என்றார். இந்தச் சந்திப்புகுறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறுகையில், ' இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!