வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (06/11/2017)

கடைசி தொடர்பு:15:35 (06/11/2017)

அரைக் கம்பத்தில் கிழிந்து தொங்கிய தேசியக்கொடி! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் மேலே உள்ள கொடிக்கம்பத்தில், தேசியக்கொடி கிழிந்து தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேசியக்கொடி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 வருட பழைமையான கற்கட்டடம் உள்ளது . இந்த வாயில் வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர் தனது அலுவலக அறைக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்தக் கட்டடத்தின் உச்சியில் உள்ள கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருக்கும். இந்த தேசியக்கொடி கிழிந்து, இன்று அரைக் கம்பத்தில் தொங்கியது . மனு நாளான இன்று, அதிகமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால், தேசியக்கொடி கிழிந்து தொங்கியதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

அதைக் கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், இதுதொடர்பாகக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பில் இருந்த பெண் காவல்துறையினர் கொடியைச் சரிசெய்ய ஊழியர்களிடம் கூறினர். பிறகு, அங்கிருந்த ஊழியர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக உச்சியில் இருந்த கொடியைச் சரிசெய்து மீண்டும் பறக்கவிட்டனர். தேசியக்கொடி கிழிந்து அரைக் கம்பத்தில் பறந்ததால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.