வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (06/11/2017)

கடைசி தொடர்பு:16:49 (06/11/2017)

சசிகலா முதல், அமைச்சர்கள் வரை... விசாரிக்கப்படுவார்களா? ஜெயலலிதா மரண விசாரணை அப்டேட் #VikatanExclusive

ஜெயலலிதா உடல் அருகே சசிகலா

சென்னை அப்போலோவில் கடந்தாண்டு ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக்கொண்ட 75 நாள்களை யாராலும் மறந்துவிட இயலாது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்து, சடலமாகவே அவரைப் பார்த்தது இந்த உலகம். அவரின் மரணத்துக்குப் பின்னால் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்கள் பலரும் சந்தேகம் எழுப்பினர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருப்பதாகக் கூறப்படும் சந்தேகங்களைத் தீர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நீதிபதி ஆறுமுகசாமி, அக்டோபர் 27-ம் தேதி, சென்னை எழிலகம் கலச மகாலில் தமக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விசாரணை கமிஷன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை சத்தியப்பிரமாண உறுதிமொழிப் பத்திரப்பதிவு ஆவணங்களுடன் நவம்பர் 22-ம் தேதிவரை எப்போது வேண்டுமானாலும் நேரிலும், தபால் மூலமும் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார். இந்நிலையில், 'ஜெயலலிதாவின் மரணத்தைச் சுற்றியுள்ள மர்ம திரைகளை இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் விலக்குமா?' என்ற கேள்வியை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிமுன் வைத்தோம். 

"தனி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கு 'விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என்ற நிபந்தனையை வைத்தார். அதை எடப்பாடியும் ஏற்றுக்கொண்டு, தற்போது விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த விசாரணை கமிஷன் அமைந்துள்ளதாக பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள். அதனைப் போக்கும்வகையில் நீதிவிசாரணை நடைபெற வேண்டும்" என்றார். தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமனோ, "மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் உடல்நிலை குறித்து முன்னுக்குப் பின் முரணாக பல அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன. 'அவர் இட்லி சாப்பிட்டார்; ஆப்பிள் சாப்பிட்டார்' என்றெல்லாம் அமைச்சர்கள் கூறினர். மத்திய, மாநில அரசு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று வந்தபோதிலும் உண்மை தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் என்னவென்று வெளிப்படையாகத் தெரியவரவில்லை.

இந்நிலையில், தமிழக அரசாலேயே நியமிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் இலாகா பொறுப்புகளை அப்போது கூடுதலாகக் கவனித்துவந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் எத்தனைபேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கும் என்று தெரியவில்லை. மேலும், ஜெயலலிதாவைப் பார்க்கவந்த மத்திய அமைச்சர்கள் எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கும் என்றும் தெரியவில்லை. மேலும், இந்த கமிஷனால் அரசுக்கு ஓர் அறிக்கையைத்தான் பரிந்துரைக்க முடியும். அறிக்கையை சட்டமன்றத்தில் விவாதம் செய்தபின்பே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க முடியும். ஆக, இந்த கமிஷன் என்பது ஒரு கண்துடைப்பே. இதற்கு பதில் சி.பி.ஐ விசாரித்தால், குற்ற முகாந்திரம் இருப்பது உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில் யார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமை உண்டு. எனவே, ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே முழுமையான உண்மைகள் வெளிவரும்" என்றார். 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, "ஜெயலலிதா மரணம் தொடர்பாக, முதலில் நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்டோம். ஆனால், தமிழக அரசு, ஒரு நபர் விசாரணை கமிஷன் போட்டிருக்கிறது. பரவாயில்லை; விசாரணை நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.' இந்த விசாரணை கமிஷன், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு எதிராகவே  நியமிக்கப்பட்டுள்ளது' என்ற கருத்துகள் பரவலாக எழவே, தினகரன் அணியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் நாம் பேசினோம். 

சி.ஆர் சரஸ்வதி"எந்த விசாரணை குறித்தும் எங்களுக்கு அச்சமில்லை. என்னை அழைத்தால் எங்கு சென்றும் நடந்ததைச் சொல்வேன். டி.டி.வி. தினகரனே, ‘ஜெயலலிதா சிகிச்சை குறித்து சி.பி.ஐ விசாரிக்கட்டும். அப்போதுதான் எங்களுக்கு எதிராக எழுப்பப்படும் தவறான கருத்துகளுக்கு விடை கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா, மருத்துவமனையில் ஜெயலலிதாவை கூடவே இருந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவர். உலகளவில் பிரபலமான மருத்துவர்களை வரவழைத்து, ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாஜி முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்போதே பிரதமரிடம் புகார் தெரிவித்திருக்கலாமே. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும்’ என்று கேட்டபோது, ‘சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’ என்றார் ஓ.பன்னீர்செல்வம். அப்போதெல்லாம் இந்தச் சந்தேகங்கள் அவருக்கு இல்லையா? பதவிக்காக ஏதேதோ அவதூறுகளை அள்ளி வீசுகிறார்" என்றார் ஆக்ரோஷமாக.

நாம் இதுகுறித்து விளக்கமறிய ஓ.பி.எஸ் தரப்பு செய்தித் தொடர்பாளரும், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாநில இணைச் செயலாளருமான கோவை சத்யனிடம் பேசினோம்." 'எந்த விசாரணை வைத்தாலும் பதிலளிக்கத் தயார்' என்று ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை சத்யன்எனவே, எங்களுக்கு எந்தத் தயக்கமுமில்லை. மேலும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. பொதுவாக 'எந்தளவுக்குத் திட்டமிடுகிறோமோ, அந்தளவுக்குப் பலன் கிடைக்கும்' என்பார்கள். அதைப்போல சிறந்த திட்டமிடலோடு இந்த விசாரணையை நீதிபதி தொடங்கியுள்ளார். அணு, அணுவாக விசாரணை நடத்தி அவர் நிச்சயம் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார். 

அதேநேரம், ஒரு நபர் கமிஷன், இதுவரை சுமார் 50 பேருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் அப்போல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீதா ரெட்டி, சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 11 பேர் கொண்ட மருத்துவக் குழு, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பெய்ல், ஜெயலலிதாவின் தனிச் செயலாளர்கள், அப்போதைய தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக விசாரணைக் குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொருபுறம், ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது மத்திய அரசுத் தரப்பிலும், இப்போது மாநில அரசில் அமைச்சர்களாக உள்ள பலரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று வந்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றனர். எனவே, 'அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கலாம்' என்று தகவல்கள் வெளியானபோதிலும் விசாரணை கமிஷன் இவர்களில் எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கும் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. 

நீதிபதி ஆறுமுகசாமி

"ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன், டிசம்பர் 25-ம் தேதிக்குள் தன் அறிக்கையைத் தாக்கல் செய்ய இயலுமா என்ற கேள்வியும் எழுகிறது. சசிகலா, தினகரன் தரப்பினரின் செல்வாக்கைக் குறைப்பதற்கு ஏதுவாக, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை அடுத்த சட்டசபைத் தேர்தல்வரை நீட்டிக்கச் செய்யவே வாய்ப்புண்டு" என்கின்றனர் நன்கு விவரமறிந்த அரசியல் வல்லுநர்கள். கமிஷன் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமியோ, "வெளிப்படையான முறையில் இந்த விசாரணை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே.