வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (06/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (06/11/2017)

மாநகராட்சி குடிநீரில் புழு, துர்நாற்றம்! கலெக்டர் ரோகிணியை அதிரவைத்த பெண்கள்

தேங்கிய நீரால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று ஒவ்வொரு தனியார் நிறுவனங்கள் மீதும் சேலம் கலெக்டர் அபராதம் விதித்தார். ஆனால், எங்கள் பகுதியில் கடந்த 2 மாதமாகக் குடிநீர் கலங்கலாகவும் நிறம் மாறியும், துர்நாற்றத்தோடும் வருகிறது. அதனால் மாநகராட்சி மீது மாவட்ட கலெக்டர் அபராதம் விதிக்க வேண்டும் என்று சேலம் அம்மாப்பேட்டைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்கள்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி, பத்மாவதியிடம் கேட்டபோது, ''நாங்க சேலம் அம்மாப்பேட்டை சிங்கமெத்தை எதிரே உள்ள அண்ணா தெரு பகுதியில் குடியிருந்து வந்திருக்கிறோம். எங்கள் பகுதி மாநகராட்சியில் 41வது டிவிஷனில் இருக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சேலம் மாவட்டத்தில்தான் அதிக உயிரிழப்புகள் நேர்ந்தது. அதையடுத்து சேலம் கலெக்டர் ரோகிணி ஒவ்வொரு வீடு, வீடாக, கடை, நிறுவனம் எனப் பல பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு கொஞ்சம் சுகாதாரக் கேடு இருந்தால்கூட அவர்கள் மீது அபராதம் விதித்தார். அது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவர் டெங்கு காய்ச்சலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதனால் அவரை நாங்கள் மக்களுக்கான கலெக்டராகப் பார்க்கிறோம். எங்கள் பகுதியில் இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால்  உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் எங்க பகுதிக்கு மாநகராட்சி மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடந்த 2 மாதமாகக் கலங்கலாகவும் நிறம் மாறியும் துர்நாற்றத்தோடும் வருகிறது. அந்தத் தண்ணீரில் கண்ணுக்குத் தெரியும் சிறிய புழுக்களும் கிடக்கின்றன. குடிநீரை குடிக்கவே முடியவில்லை. வசதியானவர்கள் ஒரு கேன் 30 ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் மாநகராட்சி மூலமாக  வழங்கப்படும் இந்தச் சுகாதாரமற்றக் குடிநீரைப் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இந்தத் தண்ணீரைக் குடிக்க அச்சப்படுகின்றனர். துர்நாற்றம் அடிப்பதால் வீட்டில் பிடித்துகூட வைக்க முடியவில்லை. இந்தத் தண்ணீரைக் குடித்து பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதோடு, வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை வருகின்றன. அதையடுத்து, எங்கள் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள்  கலெக்டரைச் சந்தித்து புகார் தெரிவித்தோம். நாங்கள் கொடுத்த புகாரைக் கலெக்டர் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்'' என்றார்கள்.