வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/11/2017)

கடைசி தொடர்பு:17:40 (06/11/2017)

மருத்துவ சக்தி வாய்ந்த மூலிகைகளைக் காக்க வேண்டும்! - கோவை விவசாயிகள் கோரிக்கை

கோவை விவசாயிகள்

முடக்கத்தான், பிரண்டை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி போன்ற மருத்துவ சக்தி வாய்ந்த மூலிகைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, "தமிழகத்தில் முன்பெல்லாம் மருத்துவ மூலிகைகள் நிறைந்திருந்தன தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு மூலிகைச் செடி தென்படும். ஆனால், இப்போதைய நவீன வாழ்க்கையில் அத்தகைய அரியவகை மூலிகைச் செடிகள் எல்லாம் அழிந்து வருகின்றன.

குறிப்பாக சோற்றுக்கற்றாழை, தூதுவளை, கோவைத்தழை, தண்ணீர் பத்தினி, அப்பக் கோவாந்தழை, துளசிச்செடி, பிரண்டை, கரிசலாங்கண்ணி, கருந்நொச்சி, எருக்கஞ்செடி போன்றவை வேகமாக அழிந்து வருகின்றன. அவற்றைக் காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் மிகமுக்கியமான கடமை. ஏனென்றால், இதுபோன்ற மூலிகைச் செடிகள்தான் ஏழைகளுக்கான மருத்துவத்தை இன்றுவரையிலும் தந்துகொண்டிருக்கிறது. அவற்றை அழியவிட்டால் ஏழைகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். எல்லோராலும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்க்க முடியாது. இந்த மூலிகைகளில் ஆகச்சிறந்த மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்பதை அரசுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழர்கள் தொன்றுதொட்டு பயன்படுத்திவரும் இந்த மூலிகைகளை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும்' என்றார்.