கப்பல் கவிழ்ந்ததில் மாயமான துத்துக்குடி மாலுமி! மீட்டுத்தர ஊர்மக்கள் கோரிக்கை | Thoothukudi people request to find missing sailor

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (06/11/2017)

கடைசி தொடர்பு:19:10 (06/11/2017)

கப்பல் கவிழ்ந்ததில் மாயமான துத்துக்குடி மாலுமி! மீட்டுத்தர ஊர்மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த மாலுமி, பிலிபைன்சிஸ் கப்பல் கவிழ்ந்த விபத்தில் மாயமாகி 24 நாள்களாகியும் இதுவரை எவ்விதத் தகவலும் தெரியாததால் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் புன்னக்காயல் மாலுமிகள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

இக்கிராமத்தைச் சேர்ந்த பெபின் தோமாஸ் என்ற மாலுமி, ஹுபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஸ்டெல்லார் ஓசியன்’ என்ற கப்பல் கம்பெனியின் இந்திய கிளையின் சென்னை ஏஜென்சியன ‘அட்மிரல் ஷிப்பிங்க்’ என்ற நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எம்ரால்ட் ஸ்டார்’ என்ற 33,205 டன் எடைகொண்ட சரக்குக்கப்பல், 26 இந்திய மாலுமிகளுடன் கடந்த அக்டோபர் 13-ம் தேதி இந்தோனேஷியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென வீசிய புயலின் தாக்கத்தால் இக்கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களில் 11 பேரை ‘டென்சா கோப்ரா’ என்ற கப்பலும், 5 பேரை ‘எம்.எஸ்.சாமரிந்தா’ என்ற அவ்வழியே சென்ற இரண்டு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர். ஆனால், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீதமுள்ள 10 பேரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதில் தூத்துக்குடி, புன்னக்காயலைச் சேர்ந்த பெபின் தோமாஸும் ஒருவர். இவரைப்பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் இல்லாததால் விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளித்துள்ளனர்.

புன்னக்காயல் மாலுமிகள் நலச்சங்கத்தினரிடம் பேசினோம், ‘‘கடந்த 13-ம் தேதி கப்பல் கவிழ்ந்த தகவல் கிடைச்சதும் 16-ம் தேதி மாயமான மாலுமி பெபின்தோமாஸின் பெற்றோர் மற்றும் எங்களது நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால், 24 நாள் ஆகியும் இதுவரை அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. தொகுதி எம்.எல்.ஏ-வோ அமைச்சரோ அதிகாரிகளோ யாருமே எங்க ஊருக்கு வந்து இந்தச் சம்பவத்தைப் பத்தி எதுவுமே கேட்கலை. இன்று திரும்பவும் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கோம். எங்க ஊரு மாலுமி மட்டுமல்ல மாயமான 10 மாலுமிகளின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியல. இது 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. இது சம்பந்தமா இந்த 24 நாளும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கு?’’ என்றனர்.

மாலுமி மாயமான சம்பவத்தால் புன்னக்காயல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க