வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (06/11/2017)

கடைசி தொடர்பு:19:25 (06/11/2017)

'ஒரு மழைக்குக்கூட இந்தக் கட்டடம் தாங்காது!' - கலங்கும் கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்


                             

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது லட்சுமணப்படி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். இந்தப் பள்ளியில் உள்ள கூடுதல் கட்டம்தான் உயரத்தில் சிலாப்பு பெயர்ந்து நின்று, அந்தக் கட்டடத்தின் உள்ளே போய் வரும் மாணவர்களின் தலையில் எந்நேரம் வேண்டுமானாலும் விழுந்து காவு வாங்கலாம் என்ற பீதியில் ஊர் மக்களைத் தள்ளி இருக்கிறது.

 இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், "எங்க ஊர் மிகவும் பின்தங்கிய ஊர். இங்கு வசிக்கும் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். தினமும் கூலி வேலைக்குப் போய்தான் வயித்துப்பாட்டைச் சமாளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியாத படிப்பறிவற்றவர்கள். அதனால், தாங்கள் படும் கஷ்டங்கள்; அல்லல்கள் தங்களோடு போவட்டும். தங்கள் பிள்ளைகளாவது பெரிய படிப்பு படித்து, நல்ல நிலைமைக்கு வரட்டும்'ன்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அங்கு சரியான கட்டட வசதி இல்லாமல் மாணவர்களை வெயிலிலும் மழையிலும் அமர வைத்து, பாடம் நடத்தும் கொடுமை நடக்குது. இதனால், பல மாணவர்கள் வெயிலில் மயக்கம்போட்டு விழுந்த கொடுமையெல்லாம் நடந்திருக்கு. அதோட, மழையில் நனைந்தபடி உட்கார்ந்து அவர்களுக்கு ஜூரம், சளி உள்ளிட்ட பிரச்னைகள் வந்திருக்கு. அதைவிடக் கொடுமையா, இந்தப் பள்ளிக்குன்னு இருக்கும் இரண்டு கட்டடங்களும் சிதிலமடைஞ்சு இடியும் நிலையில் இருக்கு.

கட்டடத்தின் சீலிங்கிலும் முன்னாடி உள்ள சிலாப்புகளில் சிமென்ட் பெயர்ந்து கீழே கொட்டிட்டு. மாணவர்கள் தலையிலும் விழுந்திருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். இந்த மழையில்கூட தாக்குப்பிடிக்க முடியாம பெயர்ந்து மாணவர்கள் மீது விழலாம். 'அந்தக் கட்டடத்தில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம்'ன்னு பள்ளித் தலைமை ஆசிரியர்கிட்ட சொன்னோம். அதுக்கு அவர், 'இந்தக் கட்டத்தில் அமர வைக்காம மாணவர்களை எங்க வீட்டிலா கொண்டுபோய் அமர வைத்துப் படிக்க வைக்க முடியும்?'ன்னு கேட்கிறார். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு இந்த விசயத்தைக் கொண்டு போனோம். அவர்களும் இதைக் கண்டுக்கலை. உடனே இந்தக் கட்டடத்தைச் சரிப்பண்ணனும். இல்லைன்னா,புதிய கட்டடம் கட்டி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கனும். இல்லைன்னா, மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த இருக்கிறோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக!.