வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (06/11/2017)

கடைசி தொடர்பு:09:03 (07/11/2017)

அயன் பட சூர்யாவை மிஞ்சிய அப்துல் கரீம்! சுங்கவரித்துறை அதிகாரிகளைத் திணறடித்த தங்கக் கடத்தல்காரர்

Gold

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த கேரளவாசியைச் சுங்கவரித்துறையினர் கையும் களவுமாகக் கைது செய்துள்ளனர்.

இன்று ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் ஒருவர் ரகசியமாகத் தங்கம் கடத்தி வருவதாக சுங்கவரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்த சுங்கவரித்துறையினர் ஷார்ஜா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவர் சிக்கினார். கரீமிடமிருந்து சுமார் 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தங்கத்தை கடத்த கரீம் செய்த டெக்னிக் அயன் பட சூர்யாவே தோற்றுப் போகும் அளவுக்கு இருந்ததுதான் வியப்பு. கரீம் காலில் அடிபட்டிருப்பதுபோல் ஒரு பெரிய கட்டுப்போட்டிருந்தார். அடிபட்ட  காயத்துக்காகத்தான்  கட்டுப்போட்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் நினைத்த சுங்கவரித்துறையினர் பின்பு அதிர்ச்சி அடைந்தார்கள். காலுக்குப் கட்டுப்போட்டிருந்த துணியினுள் கெமிக்கலுடன் தங்கத்தைப் பொடியாக்கி கலந்து கட்டிக்கொண்டு வந்திருந்தார். இந்த நூதன கடத்தலை சுங்கவரித்துறை அதிகாரிகள்  சாதுரியமாகக் கண்டுபிடித்தனர்.  அப்துல் கரீமை கைதுசெய்து தங்கத்தை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பொற்கொல்லர் உதவியுடன் அந்தக் கட்டுப்போடப்பட்டிருந்த துணியிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்துள்ளார்கள்.