தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு சீனாவில் 3 ஆண்டுகள் சிறை!

தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது ஜின் பிங்கின் சீன அரசு.

தேசிய கீதத்தை அவமதித்தால் சிறைத் தண்டனை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 2-வது முறையாக அதிபர் ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், 2022-ம் ஆண்டு வரை சீன அதிபராக ஜின்பிங்கே தொடருவார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாசேதுங் போன்று வலுவானத் தலைவராக அவர் உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

ஜின்பிங், 'உலகில் சக்தி மிகுந்த நாடாக சீனாவை உருவாக்குவேன்' என சபதமிட்டுள்ளார். நாட்டு மக்களிடையே தேசப்பற்று முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங் நகரம் 1997-ம் ஆண்டு மீண்டும் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. ஹாங்காங்வாசிகள் சீன தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள் என சீன மக்கள் குற்றம்சாட்டுவது உண்டு. சமீபத்தில் ஹாங்காங்கில்  ஃபிபா உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசிய அணியுடன் சீன அணி மோதியது. இந்தப் போட்டியின்போது, ஹாங்காங் ரசிகர்கள் சீன தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பாடினர்.

சீனா இயற்றியுள்ள இந்த சட்டம் ஹாங்காங், மக்காவு பிரதேசத்தை நேரடியாக கட்டுப்படுத்தாது. ஏனென்றால், இந்தப் பிரதேசங்களுக்கு தனி அரசியலமைப்புச் சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த பிரதேசங்களில் சீன தேசிய கீதத்தை அவமதித்தால் 15 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

தேசிய கீதத்தின் வரிகளை மாற்றுவது, அவமதிக்கும் வகையில் பாடுவது, தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காதது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!