Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொலைந்துபோன 30 கிராமங்கள்... சென்னைக்குள் ஓர் அத்திப்பட்டி..! #VikatanExclusive

காணாமல்போன நீர்நிலைகளையே பார்த்த நமக்கு, சாலைப் போக்குவரத்துத் துண்டிப்பால், 30 கிராமங்கள் மொத்தமாகத் தொலைந்திருப்பது புது தகவல்தான். 'சிட்டிசன்' சினிமாவில், அஜித் போராடும் அத்திப்பட்டி போல் இவை தொலைதூரக் கிராமங்கள் அல்ல. பெருநகரச் சென்னை எல்லைக்குள்ளேயே இருக்கிற ஊராட்சிகள்தான். அரசுப் பதிவின்படி இவை கிராமங்கள். சென்னை வண்டலூர் அருகேதான், இப்படி ஐந்து ஊராட்சிகளும், 30 கிராமங்களும் குறைதீர்க்க ஆளில்லாமல் கிடக்கின்றன. "நீங்களாவது எங்க குறையை கேட்பீங்களா சாமீ" என்று காது தேடிவந்த கிராமத்துக் கதறல், நம்மை வண்டலூருக்கு ஓடவைத்தது.

நம்மை எதிர்கொண்ட ஊர்ப்பெரியவருக்கு எண்பது வயதிருக்கலாம். அவரால், சரியாகப் பேசவும் முடியவில்லை. "ஞ்சாமீ... நாஞ் சாகறதுக்குள்ளே இந்த ஊருப் புள்ளைங்களுக்குக் கல்யாணம், காட்சினு ஏதாவது நடக்கணுஞ்சாமீ... 'இந்த ஊருங்களா'னு கேட்டுட்டு யாரும் பொண்ணெடுக்க, குடுக்கனு வரமாட்றாங்கப்பா" என்றபடி தம்முடைய ஆற்றாமையைக் கொட்டினார். வண்டலூர் பிரதான சாலையிலேயே டூ-வீலரை ஓரங்கட்டிவிட்டு ஊருக்குள் புகுந்தோம். பார்க்கும் இடமெல்லாம் உள்ளங்கை அளவுக்குப் பாதையும், மிச்ச இடங்கள் எல்லாம் நீர் நிரம்பிய குட்டைகளாகவும் காட்சியளித்தன. மக்கள், அந்த உள்ளங்கைப் பாதைவழியாகவே போய் வருகின்றனர்.

     வெள்ளம், பள்ளம் சூழநிற்கும் கிராமமக்கள்

வண்டலூரில் செயல்படும் கிராமங்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தனசேகரனிடம் பேசினோம். “இந்த ஊருக்குப் பேருந்து வசதியை நிறுத்தி 12 ஆண்டுகள் ஆகின்றன. ஊர் என்றால் மொத்தமாக முப்பது கிராமங்களைக் கொண்டதுதான் இந்த ஊர். ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். காரணை புதுச்சேரி ஊராட்சி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், குமிழி போன்ற ஊராட்சிகள் இங்கே அடுத்தடுத்து அமைந்துள்ளன. ஓர் ஊராட்சியில் ஐந்து கிராமங்கள் உள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஊரப்பாக்கம், நல்லம்பாக்கம் சாலை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சென்னை திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி, வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. இத்தனை ஊருக்கும் பாதை இது ஒன்றுதான். இங்குள்ளவர்களுக்குக் கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு வரைதான். மேல்படிப்புக்கு வழியில்லை. இதனால், எங்கள் ஊரில் யாரும் பெண் கொடுக்கவோ, எடுக்கவோ தயங்குகிறார்கள். ஆனாலும், நாங்கள் சென்னையில் வசிக்கிறோம். எங்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண், சென்னை 127-தான். 

சசிகலாதனசேகரன்தாம்பரத்திலிருந்து வண்டலூர், கண்டிகை, கீரம்பாக்கம், குமுழி, மேலையூர் வழித்தடமாக 55 ஆர் என்ற பேருந்து அப்போது இருந்தது. அதேபோல், திருப்போரூர் மார்க்கமாக வந்துபோகும் வழித்தடம் இருந்தது. 55-டி, 60 -கே, 60-டி, 555 என்ற எண்ணுள்ள 5 பேருந்துகள் பல்வேறு வழிப்பாதைகள் மூலம் இங்குள்ள 30 கிராமங்களுக்கும் வந்து போய்க் கொண்டிருந்ததைப் பிள்ளைகள் நம்பவும் மறுக்கிறார்கள். அனைத்தும் நிறுத்தப்பட்டு, 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது எஸ்.5 என்ற சிற்றுந்து ஒன்று மட்டும் அண்மையில் விட்டார்கள். மழையின் காரணமாக அதையும் நிறுத்திவிட்டார்கள். மழைவிட்டதும்  பள்ளிகளைத் திறப்பார்கள். பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் பிள்ளைகள் பாடம் படிக்க முடியுமா? மழை நேரத்தில் எந்தப் பக்கம் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்குமோ யாருக்குத் தெரியும்? நல்லம்பாக்கம் முதல் ஊனம்பாக்கம் கிரஷர் வரையில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதி என்று கூறி சாலை அமைக்கும் போதெல்லாம், வனத்துறை அதில் குறுக்கிட்டு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. வனத்துறைக்குச் சொந்தமான இடமாகச் சொல்வது வெறும் 400 மீட்டர் தூரமுள்ள பாதைதான். அதற்காக 30 கிராமங்களில் வசிக்கும் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

2006-ல்  ரூ.9 கோடியையும், 2014-ல் ரூ.6 கோடியே 30 லட்சம் நிதியையும் அரசு ஒதுக்கிக் கொடுத்தது. நிதி ஒதுக்கியதோடு சரி, இதுவரையில் வேலைதான் நடக்கவில்லை. வனத்துறையின் தலையீடு அடிக்கடி இருப்பதால், அந்தத் துறையின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, கடந்த அக்டோபர் 3-ம் தேதி சந்தித்து மனுகொடுத்தோம். அதே இடத்தில்,  மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு, 'உடனே ஆவன' செய்வதாக உறுதி கூறினார். மந்திரி பெஞ்சமின், மரகதம் குமரவேல் எம்.பி, முன்னாள்  எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்,முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் அப்போது சாட்சியாக உடனிருந்தனர். அடுத்ததாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை மே 12-ம் தேதி, அவருடைய முதல்வர் இல்லத்திலேயே நேரில் போய்ப் பார்த்து மனுகொடுத்தோம்.

கிராமங்கள் கிடைக்குமா ? மந்திரியிடம் மனு

சாலை அமைப்புக்காக அரசின் நிதி எப்படி ஆடாமல் அசையாமல் இருக்கிறதோ, அதேபோன்று  மந்திரி, முதல்வர் ஆகியோரிடம் கொடுத்த மனுக்களும் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கின்றன. நாங்களே வாழமுடியாத நிலை இருப்பதால், ஊரில் வைத்திருந்த கால்நடைகள், கோழி, புறா போன்ற வளர்ப்புப் பறவைகள் அனைத்தும், போதிய மேய்ச்சல்  இடமில்லாமல் கைவிட்டுப் போய்விட்டன.  இனி மிச்சமிருப்பது எங்கள் உயிர் மட்டும்தான். அதுவும் மொத்தமாகப் போகுமோ, தவணை முறையில் போகுமோ தெரியவில்லை"  சசிகலா தனசேகரனின் வார்த்தைகளில் கோபமும், ஆத்திரமும் கலந்து வெடிக்கிறது... பேருந்துகள் வந்துபோன முப்பது கிராமங்களும் இன்று மனிதர்கள் நடக்கக்கூட முடியாத அதளபாதாளத்தில்  தள்ளப்பட்டிருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close