வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (07/11/2017)

கடைசி தொடர்பு:08:05 (07/11/2017)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டன..! ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 'அதில், 309 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வசம் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன' என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்குறித்து மொத்தம் 309 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டு பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின்மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மனுக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், மனவளர்ச்சி குன்றிய 3 சிறப்புப் பள்ளிகளுக்கு தலா 21,900 ரூபாய் மதிப்பிலான ஜபேட்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக சட்டப் பட்டதாரிகள், சட்டத் தொழில் தொடங்க ஊக்குவிப்புத் தொகையாக 10 சட்டப் பட்டதாரிகளுக்கு தலா 50,000-க்கான காசோலைகளையும் அரவக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் வழங்கினார்.