திறந்து ஒரு வாரமே ஆன பள்ளிக் கட்டடம்... மழைநீர் ஒழுகும் அவலம்... சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

பள்ளிக் கட்டடம் திறந்து 4 நாள்களில் ஒழுகியதால், மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்தச் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சுண்டிப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில், ஊரக வளர்ச்சிதுறைமூலம் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 11.80 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக் கட்டடம் 2016 - 2017 ஆண்டில் கட்டப்பட்டு, கடந்த 2-ம் தேதியன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கொறடா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ  ஆகியோர் திறந்துவைத்தனர். 2-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து மழைத் தண்ணீர் உள்ளே ஒழுக ஆரம்பித்துள்ளது. இதனால் மாணவர்கள் பழைய கட்டடத்துக்கு இடம்பெயர்ந்து படித்தனர்.

இதையறிந்த பெற்றோர்கள், கட்டடம் கட்டிய ஒரு வாரத்திலேயே இப்படி இருந்தால்,  நாளடைவில் இடிந்துவிழுந்துவிட்டால், எங்கள் குழந்தைகளின் கதி என்னாகுமோ என்ற அச்சத்துடன் சுண்டிப்பள்ளம் கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி, பள்ளிக் கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் எனக் கோரி, சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆணையர் அமிர்தலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரையைச் சரிசெய்து தருகின்றோம் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர். இதனால், சென்னை-கும்பகோணம் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!