வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (07/11/2017)

கடைசி தொடர்பு:12:16 (08/11/2017)

கார்டுக்காக 45 நிமிடம் காத்திருந்த ரயில்! மாணவர்கள், பயணிகள் கொந்தளிப்பு

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் ரயில்வே ஸ்டேஷனில், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென்று ரயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் மறியல்


கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம், பெரியபட்டு, சிலம்பிமங்கலம், கீழ்பூவானிகுப்பம், சிந்தாமணிக்குப்பம், பெத்தாங்குப்பம் எனச் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள், விழுப்புரத்திலிருந்து கடலூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் மூலமாகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குச் சென்று படித்துவருகிறார்கள். சொற்ப குடும்ப வருவாயில் செலவைக் குறைக்கவே, இந்த ரயிலுக்கு மாதாமாதம் பணம் கட்டி பாஸ் எடுத்துவைத்திருக்கிறார்கள் மாணவர்கள்.

வழக்கம்போல இன்று காலை, புதுசத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து நின்ற பாசஞ்சர் ரயில், சுமார் 45 நிமிடமாக எடுக்கவேயில்லை. இன்ஜினில் ஏதாவது கோளாறாக இருக்கும், அதைச் சரிசெய்து விரைவில் எடுத்திடுவார்கள் என்று அமைதியாக இருந்தார்கள் பயணிகளும் மாணவர்களும். பிறகுதான் தெரிந்தது, ஐ.எல்.எஃப்-பில் பணிபுரியும் இரண்டு கார்டுகள் வருகைக்குத்தான் ரயில் காத்திருக்கிறது என்று. இரண்டு தனிநபருக்காக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவதா என்று ஆத்திரமடைந்த மாணவர்கள், திடீரென்று ரயில்முன் திரண்டு, ''தேர்வுக்கு நேரமாகுது ரயிலை எடுங்கள்'' என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.