சென்னை ஐ.ஐ.டி-க்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள்..! - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி! | NGT Case against IIT Madras: Interim Order given

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/11/2017)

கடைசி தொடர்பு:14:30 (07/11/2017)

சென்னை ஐ.ஐ.டி-க்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள்..! - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி!

சென்னையில் அமைந்துள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ள நரிகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்களால் உருவாக்கப்படும் குப்பைகளாலும் அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலும் வன உயிரினங்கள் பல இறந்துள்ளன. குறிப்பாக, 220 மான்கள் இறந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் தெரியவந்து, பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து, வன விலங்கு ஆர்வலர் கிளமென்ட் ரூபின், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

மெட்ராஸ் ஐஐடி

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், `இன்னும் ஒரே வாரத்துக்குள் ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் திடக் கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். இந்த விஷயம்குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரியும் சென்னை மாநகராட்சியின் அதிகாரி ஒருவரும் ஐ.ஐ.டி. வளாகத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். வளாகத்துக்குள் எந்தவொரு நிகழ்ச்சி நடந்தாலும், அந்நிகழ்ச்சியில் சத்தம் குறைவாக வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடும் குறைவாகவே இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதாவது மீறப்பட்டால், ஐ.ஐ.டி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்' என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.