வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (07/11/2017)

கடைசி தொடர்பு:17:57 (07/11/2017)

குறையும் கேம்பஸ் இன்டர்வியூ... மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? #VikatanExclusive

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ களைக்கட்டும். ஆனால், `இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ ஆரம்பித்திருந்தாலும், இதுவரை நிறுவனங்கள் அதிக அளவில் கல்லூரிக்கு வரவில்லை' என்கின்றனர். இதனால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் களையிழந்து காணப்படுகின்றனர். இதற்கான காரணம் என்னவென, பொறியியல் கல்லூரிகளிலும் பன்னாட்டு நிறுவன மனிதவளத் துறையினரிடம் விசாரித்தோம்.

கேம்பஸ் இன்டர்வியூ

‘அல்டைம்டிரிக்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் வெங்கட்ரமணி, “சேவை பிரிவில் உள்ள இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்யும். புராடெக்ட் சார்ந்த பிரிவில் இருப்பவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தேர்வுசெய்வது உண்டு. ஆனால், இந்த ஆண்டு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலும், கடந்த ஆண்டுகளைப்போல் அதிக அளவில் மாணவர்களைத் தேர்வுசெய்ய முடியாத நிலை உள்ளது.

பொருளாதார மந்த நிலையும், புரோகிராமிங், டெஸ்டிங் பணிகளை ஆட்டோமேஷன் செய்யப்படுவதும், வழக்கமான பிரிவுகளைத் தவிர புதிய பிரிவுகளில் மட்டுமே ஆள்கள் தேவைப்படுவதும் இதற்கு முக்கியக் காரணங்கள். நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்திருப்பதால் ஒரே திட்டப்பணிக்குப் பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோடுகின்றன. இதனால், நிறுவனங்களுக்கு திட்டப்பணிகள் கிடைப்பதிலேயே பெரிய அளவில் போராடவேண்டியுள்ளது. 

கேம்பஸ் இன்டர்வியூஇதைத்தவிர, கடந்த காலங்களில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 30 - 40 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது 8 முதல் 15 சதவிகிதம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. நிறுவனத்தின் செலவைக் குறைத்து வளர்ச்சியை உயர்த்தவும், புதிய பிரிவுகளில் களம் இறங்கி விரிவாக்கம் செய்யவும் நிறுவனங்கள் முயல்கின்றன. வேலைவாய்ப்புச் சந்தையில், ஏற்கெனவே நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களே எளிதாகக் கிடைக்கவும் செய்கின்றனர். 

இதனால், வளாகத் தேர்வில் அதிக அளவில் தேர்வுசெய்வதைக் குறைத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தேர்வுசெய்யும் நிலையில் இருக்கிறோம். கடந்த காலங்களில், மாணவர்களைத் தேர்வுசெய்யும்போது ஓரளவுக்கு ஐடி திறனும் கம்யூனிகேஷன் திறனும் இருந்தால் போதும். ஆனால், தற்போது தேர்வுசெய்தவுடன் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால், கோடிங் நன்கு அறிந்த, பல்வேறு திட்டப்பணியில் செயலாற்றுவதற்கு ஆர்வமும் திறமையும் உள்ளவர்களை மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வுசெய்கிறோம்" என்றார். 

வளாகத் தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பை எளிதில் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு...

“மாணவர்கள் தங்களுடைய பாட அறிவுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தற்போது வளர்ந்துவரும் பிரிவுகளாக இருக்கும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், டேட்டா அனாலிட்டிக்ஸ், பிக் டேட்டா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, க்ளாவுட் கம்பியூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், இந்தப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. ஆகையால், இந்தப் பிரிவுகளில் கூடுதல் அறிவையும் வளர்த்துக்கொண்டால், வேலை கிடைப்பது எளிது" என்றார் மகேஷ் வெங்கட்ரமணி.

தனியார் கல்வி நிறுவனத்தில் மூத்த வேலைவாய்ப்பு அதிகாரியாக உள்ள பேராசிரியர் மாறன் “கடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. 

கேம்பஸ் இன்டர்வியூஉற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு வளர்ச்சி இருக்கும் என்பது முன்னரே கணித்து, இவ்வளவு பேரைத் தேர்வுசெய்ய இருக்கிறோம் என்பதைச் சொல்வார்கள். ஆனால், ஐடி நிறுவனங்கள் அதுபோன்று சொல்லாததால், கேம்பஸ் இன்டர்வியூவில் குழப்பமான நிலை நிலவுகிறது. இந்தக் குழப்பநிலையைத் தவிர்க்கும் வகையில் ஐடி நிறுவனங்கள் குறிப்பிட்ட திறன் பெற்ற மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறோம் என்பதை முன்னரே கல்லூரிகளும் அறிவுறுத்தலாம். இதன்மூலம், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல் மாணவர்களை தயார்செய்து வைப்பதற்கு உதவிட முடியும். ஆனால், அதுபோன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு வருகின்றனர். நேர்முகத் தேர்வில் மிகவும் கஷ்டமான கேள்விகளைக் கேட்டு மாணவர்களைத் திணறடிக்கின்றனர். 

தற்போது வளாகத் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற, இனி கூடுதல் நேரத்தை ஒதுக்கி தயாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஐடி நிறுவனங்கள் டேட்டா அனாலிட்டிக்ஸ், க்ளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங் போன்ற குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் ஆள்களைத் தேர்வு செய்வதால் மாணவர்கள் மேற்சொன்ன பிரிவுகளில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்" என்கிறார் மாறன். 

வழக்கமாக, தொழில்நுட்பக்கல்வியில் புகழ்பெற்ற ஐ.ஐ.டி-களில் கேம்பஸ் இன்டர்வியூவில் கூகுள், ஐ.பி.எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு அதிக அளவில் சம்பளம் கொடுத்து மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தற்போது ஐ.ஐ.டி-க்களில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களே மாணவர்களை அதிக அளவில் தேர்வுசெய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்