வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (07/11/2017)

கடைசி தொடர்பு:15:28 (07/11/2017)

பல்லாங்குழியான சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்திய மக்கள்!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் குண்டும் குழியுமாக சாலை இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் அந்தச் சாலைகளில் நாற்று நடவு செய்யும் போராட்டம் நடந்தது. 

மோசமான சாலை

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையத்தில் சாலைகள் சிதிலமடைந்து குண்டும் குழியுமாகக் கிடந்தன. அந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இந்தச் சாலைகளை மழை காலத்துக்கு முன்பாகவே சீரமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு மனுவும் அளிக்கப்பட்டது. 

ஆனால், அதிகாரிகள் வழக்கமான மெத்தனத்தைக் காட்டி வந்ததால், தற்போது பெய்த மழைக்குப் பின்னர், சாலையில் செல்லவே முடியாத நிலைமை உருவானது. குறிப்பாக, மேலப்பாளையம் சந்தைப் பகுதியில் இருந்து கருங்குளம் வரை செல்லக்கூடிய பகுதிகள் முழுமையாக சீரடைந்து கிடப்பதால் அதிருப்தி அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர், இன்று அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். 

சீரமைப்பு

த.மு.மு.க மாவட்டச் செயலாளர் அப்துல்கனி தலைமையில் நடந்த நாற்று நடும் போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரான ரசூல்மைதீன், மாவட்ட துணைச் செயலாளர்களான மேலப்பாளையம் காஜா, டவுன் ஜாபர், ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டம் நடப்பதை அறிந்ததும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாகச் சாலையில் மண் அடித்து பள்ளங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், மழை முடிந்ததும் சீரமைப்பதாகவும் உறுதி அளித்தனர். சாலைப் பணிகளை மேற்கொண்டு நிரந்தரமாகச் சீரமைத்துக் கொடுக்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என மனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.