2 குழந்தைகளுடன் மூன்று பெண்கள் தீக்குளிக்க முயற்சி! மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று மதியம் திவ்யா என்ற பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்களுடன் வந்திருந்தார். அப்போது, குடும்பத்தினரோடு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் பாய்ந்துவந்து அவர்களைக் காப்பாற்றினர். இந்தச் சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட திவ்யாவிடம் பேசியபோது, "18 வருடங்களுக்கு முன் தவிடன் என்பவரைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு, மதுரை ஒத்தக்கடை முத்துசாமிபுரத்தில் வசித்துவருகிறோம். ஐந்து மாதங்களுக்கு முன், என் கணவர் உடல் நலமில்லாமல் மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டுவருகிறோம். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீட்டை அபகரித்து ஊரைவிட்டு துரத்தும் எண்ணத்தில் அந்தப் பகுதியில் ரவுடித்தனம்செய்துவரும் பிரபாகரன், சேகர், முத்துராக்கு ஆகியோர் மிரட்டிவந்தனர். 

எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பினார்கள். என் அத்தை கஞ்சா விற்பதாகப் பொய்ப் புகார் கொடுத்து, அவரை சிறைக்கு அனுப்பினார்கள். 

தற்போது, எங்களை ஊர்விலக்கம் செய்து, பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்காத வகையில் செய்துவருகிறார்கள். இதைப்பற்றி ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. புகார் கொடுத்ததை வாபஸ் வாங்கு என்று இப்போது மிரட்டுகிறார்கள். அதனால், வேறு வழியில்லாமல் தற்கொலைசெய்துகொள்ள முடிவுசெய்தோம்" என்றார்.

தற்போது, இவர்களின் பிரச்னையை அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். இன்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது நடந்த இந்தச் சம்பவத்தால் பரபரப்பானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!