வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/11/2017)

கடைசி தொடர்பு:18:40 (07/11/2017)

சேலத்தை அச்சுறுத்தும் டெங்கு! - 8 மாதக் குழந்தை பலி

தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த மாவட்டம் சேலம். அதையடுத்து  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதோடு நோய் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட்டு வந்தார்கள். இதனால் கடந்த ஓரிரு வாரங்கள். டெங்கு காய்ச்சல் சற்று குறைவாக இருந்தது.

டெங்கு

வடக்கிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு மீண்டும் காய்ச்சல் அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27-ம் தேதி தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 8 மாத பெண் குழந்தை சத்யஶ்ரீ காய்ச்சலால் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து சத்யஶ்ரீக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சத்யஶ்ரீ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுப்பற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது, ''கடந்த மாதம் காய்ச்சலால் மட்டும் ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் வந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்து வந்தது. தற்போது வடக்கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் காய்ச்சலால் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சலால் மட்டும் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது'' என்றார்கள்.