குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவி! - மீண்டும் படிப்பை தொடர உதவிய ஆட்சியர் | Ramanathapuram collector helped for student's education!

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/11/2017)

கடைசி தொடர்பு:19:00 (07/11/2017)

குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவி! - மீண்டும் படிப்பை தொடர உதவிய ஆட்சியர்

குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த நிதி வழங்கினார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் - கற்பகம் தம்பதியினரின் மகள் மங்கையர்கரசி. திருமண வயதை எட்டாத இவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடக்க இருந்தது. இது குறித்து மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி ஆய்வு மேற்கொண்டு மங்கையர்க்கரசிக்கு நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். இதன் பின் மங்கையர்க்கரசி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதியில் தங்கியிருந்து கீழக்கரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பு படித்து வருகிறார்.

.மாணவி மங்கையர்கரசிக்கு கல்வி கட்டணம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்


இந்நிலையில் மங்கையர்க்கரசியின் பெற்றோரால் மாணவி மங்கையர்க்கரசிக்குப் போதிய கல்வி வழங்க இயலாத சூழ்நிலை மாவட்ட ஆட்சியர் நடராஜனின் கவனத்துக்கு தெரிய வந்தது. இது குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், தனது விருப்புரிமை நிதியிலிருந்து மாணவி மங்கையர்கரசியின் கல்வி கட்டணத்துக்கான தொகையை வழங்கும் வகையில் அதற்கான  காசோலையை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மாணவி மங்கையர்க்கரசியிடம் இன்று வழங்கினார்.