தூத்துக்குடியில் தொடர் மழை! - மூழ்கிய உப்பளங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 18 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி சேதமானதோடு உப்பு உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

salt production affected by rains

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி மாவட்டம்தான் முதலிடத்தை வகிக்கிறது. தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவங்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், வேம்பார், தருவைக்குளம், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர் ஆகிய பகுதிகள் என மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. இத்தொழிலில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த தொடர் மழையால் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் முழுவதும் தண்ணீர் தேங்கி வாறுகால்கள் சேதமாகியுள்ளன. கரைப்பகுதியில் குவித்து வைக்கபட்டுள்ள உப்பின் மீது மழைநீர் பட்டதால் உப்பு கரைந்தும், இறுகிக் கட்டி சேர்ந்தும் உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளத் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். 

salt production affected by rains

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்திலிருந்து குறிப்பாக தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் உப்பிற்கு போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடந்து வந்தது. இதனால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படாமல் தரிசாகக் கிடக்கும் சூழல் உருவாகி வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தூத்துக்குடியிலிருந்து தென்கொரியாவிற்கு 32,500 டன் உப்பு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உப்பு ஏற்றுமதியாகத் தொடங்கியதால் உப்பு உற்பத்தியாளர்களும் உப்பளத் தொழிலாளர்களும் உப்பு உற்பத்தியில் உற்சாகமாக ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எம்.வி. எலினி என்ற கப்பல் மூலம் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டைப் போல மற்ற மாநிலங்களுக்கும் உப்பு ஏற்றுமதி தொடங்கி நடந்து வரும் சூழலில் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   

ஏற்கெனவே குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உப்பினை மட்டும் தற்போது ஏற்றுமதிக்காக அனுப்பும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும், மழை இல்லாத நேரத்தில் மட்டும் லாரிகளில் உப்பினை ஏற்றி அனுப்பிட முடியும் என்பதால் பெரும் சிரமத்தில் உள்ளனர். இருப்பு வைக்கப்பட்டுள்ள உப்பு, குறிப்பிட்ட சில நாள்கள் வரை மட்டுமே இருக்கும் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!